ரி 20 உலககிண்ணம் : இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்
ரி 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 06 ஓட்டங்களால் திரில் வெற்றி பெற்றது.
நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில்
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (Rishabh Pant) 42, அக்சர் படேல்(Axar Patel ) 20 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் நசீம் சா (Naseem Shah) மற்றும் ஹரீஸ் ரவூப் (Haris Rauf) ஆகியோர் தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்படி 120 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
பாகிஸ்தான் அணி சார்பில்
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் மொகமட் றிஸ்வான் (Mohammad Rizwan) அதிகபட்சமாக 31 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா(Jasprit Bumrah) 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். போட்டியின் ஆட்டநாயகனாக பும்ரா தெரிவானார்.
இலங்கையின் சாதனை சமன்
இதேவேளை இப்போட்டியில் 120 ஓட்டங்களை கட்டுப்படுத்திய இந்தியா ரி 20 உலக கோப்பை வரலாற்றில் மிகவும் குறைந்த இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய அணி என்ற இலங்கையின் உலக சாதனையை சமன் செய்தது. இதற்கு முன் கடந்த 2014ஆம் ஆண்டு சட்டோகிராம் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை அணியும் 120 ஓட்டங்களை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி சாதனை படைத்திருந்தது.
புதிய உலக சாதனை
அத்துடன் ரி 20 உலகக் கோப்பைகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 7வது வெற்றியை பதிவு செய்தது. அதன் வாயிலாக ரி 20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை (7) பதிவு செய்த அணி என்ற புதிய உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தானும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இலங்கையும் தலா 6 வெற்றிகள் பெற்றதே முந்தைய சாதனையாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |