அமெரிக்க சபாநாயகரின் விஜயத்தையடுத்து தொடர் சிக்கலுக்குள் தைவான்!
தைவானின் முக்கிய அரசாங்க இணையத்தளங்கள் இணையவழித் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அரச இணையத்தளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றிருந்தபோதே அத்தகைய இணையத் தாக்குதல்கள் இடம்பெற்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பெலோசி தைவானைச் சென்றடைந்ததையடுத்து தைவானிய அதிபர் அலுவலகம், வெளியுறவு அமைச்சு, ஆங்கில மொழியிலுள்ள முக்கிய அரசாங்க இணையத்தளம் ஆகியவை தாக்கப்பட்டன.
அந்த இணையத் தாக்குதல்கள் சீன, ரஷ்ய இணைய முகவரிகளுடன் தொடர்புடையவை என்று தைவானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
தைவானை சுற்றி பெரியளவில் இராணுவ நடவடிக்கை

அரசாங்க இணையப்பக்கங்கள் நிமிடத்துக்கு சுமார் 8.5 மில்லியன் முறை திறக்கப்பட்டதால் தளங்கள் செயலிழந்து முடக்கப்பட்டன. அத்தகைய தாக்குதல் DDoS - distributed denial of service என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் தைவானைத் தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதும் சீனா தைவானைச் சுற்றிப் பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதன்போது வெளிநாட்டுப் படைகளிடமிருந்து எந்நேரமும் தாக்குதல் வரலாம் என்றும் வெளியுறவு அமைச்சு சூழ்நிலையைக் கண்காணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.