காபூலில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண் சமுக ஆர்வலர் மீது தலிபான்கள் தாக்குதல்
தமது உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் காபூலில் போராட்டம் நடத்திய பெண் சமூக ஆர்வலர் ஒருவர் மீது தலிபான்கள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் உரிமை மறுக்கப்படும் என்பதால், தலிபான்களுக்கு எதிராக சில பெண்கள் தலைநகர் காபூலில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்படி 2ஆம் நாளாக நடைபெற்ற போராட்டத்தில் தான் தலிபான்கள் பெண் சமூக ஆர்வலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
தலிபான்கள் தாக்குதல் நடத்திய அந்த நபர் நர்கிஸ் சதாத் என்ற பெண்கள் உரிமை ஆர்வலர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தலிபான்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பெண்கள், ஆப்கன் அதிபர் மாளிகை நோக்கி ஊர்வலம் சென்றுள்ளனர். அதைத் தடுத்த தலிபான்கள் அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதாகவும், அதைத் தொடர்ந்து போராட்டம் வன்முறையாக மாறியதாகவும் டோலோ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஆப்கன் அதிபர் மாளிகைக்கு முன் போராட்டம் நடத்த முயன்றதாகவும் ஆனால் அதற்கு அனுமதிக்காமல் தலிபான்கள் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் போராட்டம் நடத்திய பெண்கள் தெரிவித்தனர்.
இது குறித்த வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. முன்னதாக வியாழக்கிழமை ஹெராட் என்ற இடத்தில் தலிபானின் புதிய அரசில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
அப்போது செய்தியாளர்களை உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு வலியுறுத்தி தலிபான்கள், பெண்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Video: A number of women rights activists and reporters protested for a second day in Kabul on Saturday, and said the protest turned violent as Taliban forces did not allow the protesters to march toward the Presidential Palace. #TOLOnews pic.twitter.com/X2HJpeALvA
— TOLOnews (@TOLOnews) September 4, 2021

