தலிபான்கள் வெளியிடவுள்ள மிகமுக்கிய அறிவிப்பு
ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் அமெரிக்காவிடம் இருந்து கைப்பற்றிய இராணுவ தளவாடங்களுடன் பாரிய வெற்றி அணிவகுப்பொன்றை தலிபானிகள் மேற்கொண்டுள்ளனர்.
இந்த அணிவகுப்பில் தலிபான்களின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் பங்குபற்றியுள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கம் தொடர்பான அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களுக்குள் வெளியாகும் எனவும் பெண்களுக்கு உயர்மட்ட பதவிகள் எதுவும் வழங்கப்படாது எனவும் தலிபான்களின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க படையினர் வெளியேறியுள்ள நிலையில், அதனை தலிபான்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் தலிபான் அமைப்பு உருவாக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான கந்தஹாரில் பாரிய வெற்றி அணிவகுப்பொன்றை தலிபான்கள் நடத்தியுள்ளனர்.
இந்த அணிவகுப்பில் அமெரிக்க இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட இராணுவத் தளவாடங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
கந்தஹாரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் தலிபான் தலைவர்கள் கதிரைகளில் அமர்ந்திருந்ததுடன், அணிவகுப்பு ஆரம்பமாகும் வரை நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் அங்கு கூடியிருந்தனர்.
பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் ட்ரக் வாகனங்கள் அணிவகுப்பில் சென்றதுடன், பிளாக் ஹோக் ரக ஹொலிகொப்டர் ஒன்றும் பறந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரணடைந்த பின்னர் ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு படையினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
தலிபான்களின் அதியுயர் மட்ட தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸடா அணிவகுப்பில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் தலிபான்களின் புதிய ஆளுநரிடம் உரையாற்றுவதற்கு இடமளித்துவிட்டு அவர் அங்கிருந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய அரசாங்கத்தை அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் சில நாட்களில் புதிய அரசாங்கம் தொடர்பான அறிவிப்பு வெளிவரும் என தலிபான்களின் மூத்த தலைவர்களில் ஒருவரான அனாஸ் ஹக்கானி குறிப்பிட்டுள்ளார். எனினும் புதிய அமைச்சவையில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதை உடனடியாக கூற முடியாத எனவும் அவர் தெரிவித்துள்ளார்.