செப்டம்பர் 11! மீண்டும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுக்க தயாராகும் தலிபான்கள்?
அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட செப்டம்பர் 11ஆம் திகதியான அதே நாளில் தலிபான்களின் புதிய அரசு ஆப்கானிஸ்தானில் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரபல ஆங்கில ஊடகத்தை மேற்கோளிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001 வரை தலிபான்கள் ஆட்சி செய்தனர். அப்போது பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா பயங்கராவதிகள் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை விமானத்தை கொண்டு மோதி தகர்த்தனர்.
இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அமெரிக்கா இந்த தாக்குதலில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து பின்லேடனை ஒப்படைக்குமாறு தாலிபன்களிடம் அமெரிக்கா கேட்டது. ஆனால் அதில் அவருக்கு சம்பந்தம் இல்லை என்று மறுத்ததுடன் அவரை ஒப்படைக்கவும் மறுத்துவிட்டது.
இதையடுத்து ஆப்கானிஸ்தான் மீது போரை அறிவித்த அமெரிக்கா, பின்லேடன் மற்றும் அல்கொய்தா இயக்கத்தினரை தேடி தேடி வேட்டையாடியது.
அத்துடன் தலிபான்களையும் விரட்டி அடித்தது. ஒரு கட்டத்தில் பின்லேடன் மற்றும் அல்கொய்தா இயக்கத்தினரை கொன்ற பின்னர், தலிபன்களுடன் சமரசம் பேசிய அமெரிக்கா, தமது படைகளை ஆகஸ்ட் 31ஆம் திகதியுடன் விலக்கி கொள்வதாக அறிவித்தது.
இதையடுத்து ஆப்கன் அரசு படைகளுக்கு எதிராக போரை தொடங்கிய தலிபான்கள், ஆகஸ்ட் 15 காபூலை கைப்பற்றிதுடன், புதிய ஆட்சியை அமைப்பதற்கு தயாராகி வருகின்றனர்.
பல்வேறு குழுவினரிடம் நிர்வாக அமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் பேசினார்கள்.
தலிபன்கள் புதிய அரசின் பதவியேற்புக்கு பாகிஸ்தான், ரஷ்யா, துருக்கி, ஈரான் மற்றும் கட்டார் நாட்டு அரசு தலைவர்களை அழைத்துள்ளனர்.
ஆனால் எப்போது பதவியேற்பு என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. எனினும் பிரதமர் உள்ளிட்ட அரசியல் உறுப்பினர்களை தலிபான் அறிவித்துள்ளது.
ஆனால் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நாளான செப்டம்பர் 11ஆம் திகதி பதவியேற்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.