தலைமைப் பதவிக்கு மும்முனைப் போட்டி - பகிரங்க அறிவிப்பு விடுத்த மாவை!
இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கு மூவர் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைமைப் பதவிக்கு கடந்த தேர்தலின் போதே இருவர் தயாராகி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தமிழரசுக் கட்சியின் எம்.பிக்களான சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் அப்பதவிக்கு குறிவைத்துள்ளதாகவும், அதேவேளை, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் தலைமைப் பதவிக்கு குறி வைத்துள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
தலைமைப் பதவிக்கு போட்டி
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு வரலாற்றில் என்றுமில்லாதவாறு போட்டி நிலவுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், கடந்த தேர்தலின் போதே சிறீதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் தலைமைப் பதவி குறித்த நகர்வுகளில், களமிறங்கிவிட்டதாகவும், சுமந்திரனை வெல்ல வைப்பதற்கு, சிறீதரன் உதவியமைக்கான காரணமும் தலைமைப் பதவியைக் குறிவைத்ததாகவே அமைந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தலைமைப் பதவியைக் குறிவைத்து, இம் மூன்று பேரும் பல்வேறு நகர்வுகளில் ஈடுபட்டு வருவதாகவும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
