வரலாற்றில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த தமிழர் பகுதி பாடசாலை(படங்கள்)
அனைவரும் திரும்பிபார்க்கும் சாதனை
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமத்தில் அமைந்துள்ள கட்டுமுறிவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, வரலாற்றில் முதல்தடவையாக விளையாட்டு வீரர்களின் திறமையின் வெளிப்பாடு காரணமாக அனைவரும் திரும்பிபார்க்கும் அளவிற்கு தற்போது மாறியுள்ளது.
கல்குடா கல்வி வலய வாகரைக்கோட்டத்திற்குப்பட்ட கட்டுமுறிவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலிருந்து 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் உதைப்பந்தாட்ட போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தினைப்பெற்று தேசிய மட்டம் தெரிவாகியுள்ளனர்.
அதிகஸ்ட பாடசாலை
குறித்த பாடசாலையானது மிக மிக அதிகஸ்ட பாடசாலையாக காணப்படுவதுடன் கதிரவெளி பிரதான வீதியிலிருந்து சுமார் 20 கிலோமீற்றருக்கு அப்பால் காடுகள் நிறைந்ததொரு பகுதிக்கு எல்லையில் அமைந்துள்ளது.
இந்தப் பாடசாலையில் இருந்து பங்குபற்றிய மாணவர்கள் உதைபந்தாட்ட போட்டியில் வலயம் மற்றும் மாகாண மட்டத்திலும் முதலாமிடம் பெற்று தேசியத்தில் கால்தடம்பதிக்கவுள்ளனர்.
நிரந்தர உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர் இல்லை
இப்படியானதொரு கிராமத்திலுள்ள பாடசாலையிலிருந்து உதைபந்தாட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு இதுவரைக்கும் நிரந்தர உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர் இல்லாமலே இவ்வாறு தேசியமட்டம் வரை செல்வதற்கு தகுதிபெற்றிருக்கின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பாடசாலையின் அதிபர் ஜீ.ஜீவனேஸ்வரன் இங்கு குறிப்பிடுகையில், கட்டுமுறிவுக்குளம் பாடசாலையில் விளையாட்டுத்துறை சார்ந்து மாணவர்களை முன்னேற்றுவதற்கும் ஊக்குவிப்பதற்கும் எவ்விதமான அடிப்படைவசதிகள் இல்லாத நிலையில் பாடசாலை சமுகம், பழைய மாணவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு காரணமாகவே உதைபந்தாட்டத்தில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
வளங்கள் கிடைக்கப்பெற்றால்
அத்துடன் எமது பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டில் நல்ல ஆர்வமுள்ளதுடன் திடகாத்திரமான மனத்தைரியமும் உண்டு. நகர பாடசாலைகளைப் போன்று தேவையான வளங்கள் கிடைக்கப்பெற்றால் விளையாட்டுதுறைசார் வெற்றிகளை வலயத்திற்கும் மாவட்டத்திற்கும் தேசியத்திற்கும் கொண்டுவரமுடியுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை என தெரிவித்தார்.
உண்மையில் கிரிக்கெட்டில் ஆசிய கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை அணியினை பட்டிதொட்டியிலுள்ள நாம் பாராட்டுகின்றோம், கொண்டாடுகின்றோம், இவ்வாறான மாவட்டத்தின் எல்லையில் உள்ள அதிகஸ்டப் பிரதேசத்தில் கல்வி கற்று விளையாட்டுத்துறை ஊடாக தெரிவு செய்யப்பட்டவர்களை நம்மில் பலர் மறந்துவிடுகின்றோம் என்பது நிதர்சனம்.
மாணவச் செல்வங்களை வாழ்த்தி வரவேற்பு
குறித்த கட்டுமுறிவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் உதைபந்தாட்டத்தில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர் என அறிந்த கட்டுமுறிவுக்குளம் மற்றும் ஆண்டாங்குளம் கிராம மக்கள் மற்றும் வாகரை கோட்டத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் தங்களுடைய மாணவச் செல்வங்களை வாழ்த்தி வரவேற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் உழவு இயந்திரத்தில் தங்களுடைய கட்டுமுறிவுக்குளம் பாடசாலையை அடைந்ததும் மாணவர்களுக்கு பாடசாலை சமுகம் மற்றும் கிராமமக்கள் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்புகொடுத்து வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.