சுயேட்சையாக களமிறங்கும் தமிழ் பொது வேட்பாளர் : சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவிப்பு
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கவுள்ள பா.அரியநேத்திரன் சுயேட்சை வேட்பாளராகவே காணப்படுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
பா.அரியநேத்திரன் (P. Ariyanethiran) தமிழ் பொது வேட்பாளராக, அறிவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது பொது வேட்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதனால் சுயேட்சையாகப் போட்டியிட முடியும்.
கட்சியின் முடிவு
அதனால் அவர் சுயேட்சையாகவே போட்டியிடுகிறார். தமிழ் பொது வேட்பாளராகப் போட்டியிடக்கூடிய 75 தொடக்கம் 80 பேர் வரையிலானவர்களின் பெயர்களைப் பரிசீலித்தே பா.அரியநேத்திரனை தெரிவு செய்துள்ளோம்.
இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பலரும் எமக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர். கட்சியின் முடிவு ஓரிரு நாட்களில் வெளிவரும் என நம்புகிறோம்.
ஒன்றிணைந்த பயணம்
நாம் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து பயணிக்கவே விரும்புகிறோம். எம்முடன் இணைந்து பயணிக்க விரும்புவோர் பயணிக்க முடியும்.
இன்னமும் ஓரிரு நாட்களில் வேட்பாளருக்கான கட்டுப்பணத்தினை செலுத்தவுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |