தமிழர் பிரதிநிதிகளுடன் அமெரிக்க இராஜதந்திரி கொழும்பில் பேச்சு
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக சமஷ்டியே அமைய முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வலியுறுத்தியதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
எனினும் சட்டரீதியாக சமஷ்டி கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வரும் நிலையில், தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்ந்தும் பறிக்கப்படுவதாக அமெரிக்க தூதுவரிடம் சுட்டிக்காட்டியதாக ஐ.பி.சி தமிழுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு

வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் தலைவர்களை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இன்று தனது இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க தூதுவர் ஜுலி சங், அதிகாரப் பகிர்வின் முக்கியத்துவம், காணி விடுவிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பதிலை கண்டறிதல், மனித புதைகுழி தொடர்பான விசாரணைகள், உண்மை, நல்லிணக்கம் மற்றும் நீடித்த அமைதிக்கான சிறிலங்காவின் முயற்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக கூறியுள்ளர்.
கொக்குத்தொடுவாய் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான விசாரணைகள் நியாயமான முறையில் நடைபெறுவது தொடர்பான கரிசனையை அனைவரும் முன்வைத்ததாகவும் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்