பிரித்தானியாவில் மனைவியை கொன்ற ஈழத்தமிழருக்கு 29 ஆண்டு சிறை!
பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஈழத்தமிழ்பெண் ஒருவர் அவரது கணவரால் மிக குருரமாக கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கொலைக்குற்றவாளியான நிமலராஜாவுக்கு 29 ஆண்டுகால சிறைத்தண்டனை நேற்று (16.01.2026) விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மூன்று குழந்தைகளின் தாயான 44 வயதான நிலானி அவரது 47 வயதுடைய கணவரான நிமலராஜாவால் குருரமாக கொல்லபட்ட சம்பவம் புலம்பெயர் தமிழ்மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்படி, நிமலராஜாவுக்கு லிவர்பூல் நீதிமன்றத்தில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தகராறு
குடும்ப தகராறுகள் காரணமாக ஏற்கனவே தனது மனைவியுடன் தொடர்பு கொள்வதற்கு காவல்துறை நிமலராஜாவுக்கு தடை விதித்தால் அவரது மனைவி அவரை குடும்பவிழா ஒன்றுக்கு அழைக்கவில்லை.

இதனால் கோபம் கொண்ட நிமலராஜா இந்த குருரக்கொலையில் ஈடுபட்டுள்ளார்.
தனது மனைவியை குத்திக்கொல்வதற்காக அங்காடியொன்றில் கத்தி ஒன்றை வாங்கிய நிமலராஜா அதனை ஒரு பையில் போட்டு மறைத்து பேருந்து ஒன்றில் ஏறி தனது மனைவி பணிபுரியும் கடைக்கு சென்று அங்கு வைத்து அவரை குத்திக்கொலை செய்துள்ளார்.
தனது தாய் தனது தந்தையால் குத்தப்படும் சம்பவத்தை அவரது 17 வயதான மகளும் நேரடியாக பார்த்திருந்தார்.
அதன் பின்னர், கைது செய்யபட்ட நிமலராஜா மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு லிவர்பூல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
கொல்லப்பட்ட நிலானியின் உடலில் 14 கத்திக்குத்து காயங்களும் நான்கு வெட்டுக்காயங்களும் இருந்த நிலையில் இது ஒரு வன்மத்துடன் திட்டமிட்ட கொலை என்பது நிருபிக்கப்பட்டு அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனையை அறிவித்த நீதிபதி நிமலராஜா குறைந்தபட்ச தண்டனைக்கு பின்னர் விடுதலை செய்யப்படக்கூடாது எனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |