தமிழர் தாயகம் தமிழர் கையில்தான் - மோடியின் கையில் அல்ல, இந்தியாவின் கையில் கூடக்கிடையாது!
பிரபாகரன் உயிரோடு
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் எனும் செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்கள் கோவிந்தன் கருணாகரத்திடம் கேள்வி எழுப்பிய போது,
அவரது பதில்,
இந்த ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 14 வருடங்கள் நிறைவடைவதற்கு இன்னும் ஓரிரு மாதங்கள் இருக்கின்றன.
மே மாதம் 18 ஆம் தேதி ஒரு லட்சத்து 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அறிக்கைகள் இருக்கின்றன.
மன்னார் மாவட்ட முன்னாள் பேராயர் ராயப்பு யோசப் ஆண்டகை சாட்சியாக இருந்திருக்கின்றார்.
அதேபோன்று ஆயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டார்கள், பாதுகாப்பு தரப்பினரிடம் கையளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையில் 14 வருடங்களுக்கு பின்பு பழ நெடுமாறன் அவர்கள் ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கின்றார், அது உலகம் முழுவதிலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதித் தருவாயில் இருந்த மூத்த ஓரிரு போராளிகள் கருத்து கூறியிருக்கின்றார்கள்.
நானும் நீண்ட காலமாக ஆயுதம் போராட்டம் தொடக்கம் அரசியலில் இருப்பவன் என்கின்ற ரீதியிலே அத்தனை உயிர்களும் பலி போகும் போது பிரபாகரன் தப்பிச் சென்றிருப்பார் என்பதனை நான் நம்ப மாட்டேன்.
14 வருடங்களுக்குப் பின்பு அவர் உயிருடன் இருக்கின்றார் என்றால், அவராக பொது வெளியில் தோன்றினால் மாத்திரமே அவர் உயிரோடு இருக்கின்றார் என்பதனை நாங்கள் நம்பக்கூடிய மாதிரி இருக்கும்.
வடகிழக்கு மோடியின் கையில்
வடகிழக்கு மோடியின் கையில் உள்ளதாக பா ஜ க வின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கின்றார், இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்திடம் வினவியபோது,
அவரது பதில்,
வடக்கு, கிழக்கு மோடியின் கையில் அல்ல, இந்தியாவின் கையில் கூட இல்லை. வடகிழக்கு என்பது தமிழர்களின் தாயகம், அது எங்களது சொத்து, அது தமிழ் பேசும் மக்களது தாயகம் எங்களது கைகளிலேயே தான் அது இருக்கின்றது.
இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற அரசாங்கங்கள் இந்த நாட்டிலேயே குறிப்பாக வட கிழக்கிலே தமிழ் பேசும் மக்களை இரண்டாம் தர பிரதிநிதிகளாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தமிழ் மக்கள் பல வழிகளிலும் தாக்கப்பட்டு, அழிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
பல இனக் கலவரங்கள் இந்த நாட்டிலே ஏற்பட்டிருக்கின்றன, சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து 58, 78, 83 ஆகிய காலகட்டங்களிலே பயங்கரமான இன கலவரங்கள், தமிழர் அழிப்பு நடவடிக்கைகள் இடம் பெற்று இருக்கின்றன.
1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோசமான தமிழர் அழிப்புக்கு பின்பு இந்தியா நேரடியாக தமிழர் பிரச்சினையில் தலையிட்டு இருந்தது.
அந்த காலகட்டத்திலேயே இந்திரா காந்தி அவர்கள் நேரடியாக இலங்கை பிரச்சனைகளில் தலையிட்டு தமிழர்களுக்கு ஒரு தீர்வை தனி நாட்டை பெற்றுக் கொடுப்பதற்காக எங்களுக்கெல்லாம் பேராதரவு தந்திருந்தார்.
ஆனால் இறுதியிலே, இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலமாக அவருடைய புத்திரன் ராஜீவ் காந்தி ஜே ஆர் உடன் இணைந்து இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி 13வது திருத்தச் சட்டத்தை அரசியலமைப்பிலே உள்வாங்கி இந்த மாகாண சபையின் முறைமையை கொண்டு வந்திருந்தார்.
இருப்பினும், அந்த மாகாண சபை முறைமை ஊடாக பகிரப்பட்ட அதிகாரங்கள் கூட பகிரப்படாமல் இன்றுவரைக்கும் தமிழ் மக்கள் தங்களுடைய பிரதேசங்களுக்குள்ளே அடக்கி ஒடுக்கப்படுகின்றனர்.
இந்த வேளையில், இலங்கை அரசும் கடந்த காலங்களிலே இந்தியாவிடம் இருந்து பல வழிகளிலும் அது ஜே.வி.பியின் போர்க்காலமாக இருந்தாலும் சரி, தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய போர்க் காலமாக இருந்தாலும் சரி, பொருளாதார சூழ்நிலையாக இருந்தாலும் சரி இந்தியாவிடம் இருந்து உதவிகளை பெற்றுக்கொண்டு சீனாவின் பக்கம் சாய்ந்து செல்கின்றது.
குறித்த காரணத்தினால் தான் மோடி அரசு வடகிழக்கு மக்கள் மீது அக்கறை கொண்டிருக்கலாம்.
மோடியின் குறித்த அக்கறை, வடகிழக்கிலே தமிழர் சுதந்திரமாக, சுய நிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தால் அது நன்றாகத்தான் இருக்கும்.
சுமந்திரன் கொழும்பில் ஒன்றும், வட கிழக்கில் ஒன்றும் பேசக்கூடியவர்.
"இலங்கை தமிழரசு கட்சி தேர்தல் முடிவடைந்த பிற்பாடு, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒன்றாக ஆட்சி அமைக்கும் கருத்துக்களை முன்வைத்து இருந்தார்கள்.
இந்த நிலையில், நேற்றைய தினம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றனர்."
இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அவரது பதில்,
முல்லைத்தீவு பிரதேச சபையில் தமிழரசு கட்சியினுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பான நீதிமன்ற வழக்கும் நிராகரிக்கப்பட்டு இருந்தது, சரியாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் நேற்றைய தினம் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்த கட்சியில் தராசு சின்னத்திலே இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர்களை உள்வாங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்று உருவாகி இருக்கின்றது.
இந்த ஒப்பந்தமானது, இலங்கை தமிழரசு கட்சிக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலான ஒப்பந்தமா அல்லது சுமந்திரனுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலான ஒப்பந்தமா என எனக்கு தெரியவில்லை.
இலங்கை தமிழரசு கட்சியினுடைய தலைவர் சேனாதிராஜா அங்கு செல்லவில்லை, அதே மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கை தமிழர் கட்சி செயலாளர் சத்தியலிங்கம் செல்லவில்லை, சுமந்திரன் மாத்திரமே சென்று இருக்கின்றார்.
இலங்கை தமிழரசு கட்சியின் நடத்தைகள், தமிழரசு கட்சியின் வேலை திட்டங்கள், கட்சியை விட சுமந்திரன் எடுப்பதுதான் தீர்மானம் போல் எங்களுக்கு தெரிகின்றது.
சுமந்திரனை பற்றி நான் கூறுவதற்கு நிறைய இருந்தாலும் அவர் ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு விதமாக பேசிக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்து விடயம்.
ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதும் கடிதங்களாக இருந்தாலும் சரி அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான விடயங்களிலும் சரி அல்லது போராட்டம் தொடர்பான விடயங்களிலும் சரி அவர் எதிர்மறையாக கொழும்பில் ஒன்றும் வட கிழக்கில் ஒன்றும் பேசக்கூடியவர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து இலங்கை தமிழரசு கட்சியை தனியாக தேர்தல் கேட்பதற்கு முடிவெடுத்து இன்று தனியாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருக்கின்றார்கள்.
தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுவதற்காக மக்களை குழப்புவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்கின்ற எண்ணத்திலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
