கோட்டாபயவின் அழைப்பை புறக்கணித்த புலம்பெயர் தமிழர்கள்
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடனான (Gotabaya Rajapaksa) கலந்துரையாடலை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் புறக்கணித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவின் பிரித்தானிய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துவருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச தலைவர் கோட்டாபாய ராஜபக்ச இம்மாத இறுதியில், பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் க்ளாஸ்கோவ் நகரில் நடைபெறவுள்ள காலநிலை மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார்.
திர்வரும் 31ஆம் திகதி முதல் நவம்பர் 15ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில், பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் விடுத்த அழைப்பினையேற்று அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார்.
இதற்கிடையில் கோட்டாபய ராஜபக்ச அங்கு தங்கியிருக்கும் நாட்களில் கடந்த காலங்களில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் சந்திப்பொன்றை நடத்த அரசதலைவர் தரப்பு ஏற்பாடுகளை செய்தது.
ஆனால் அந்த தமிழ் அமைப்புகள் அதற்கு உடன்படவில்லை என குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இதர தமிழ் அரசியல் கட்சிகளுடன் பூர்வாங்க பேச்சுக்களை நடத்தாமல், புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லையென குறித்த அமைப்புகள் அரச தலைவர் தரப்பிடம் சுட்டிக்காட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.