தமிழ் கட்சிகள் மோடியைச் சந்திப்பதில் இழுபறி : பின்னணியில் ரெலோவின் தலைவரா..
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் உட்பட்ட சமகால பிரச்சினைகள் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பும் விடயத்தில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தொடர்ந்தும் பின்னடிப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்த விமர்சனத்தை செல்வம் அடைக்கலநாதன் இன்று(24) நிராகரித்துள்ளார்.
தமிழ் கட்சிகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்குரிய நேரத்தை ஒதுக்கித்தருமாறு அவரது பணியகத்திடம் கோரிக்கை விடுத்து கடிதம் ஒன்றை அனுப்பும் விடயத்தில் ஒன்றுபட்ட முடிவை எடுப்பதற்கான இழுபறி கடந்த சில வாரங்களாக தொடர்கின்றது.
ஆதாரமற்ற குற்றச்சாட்டு
எதிர்வரும் புதன்கிழமை தமிழ் தேசியக் கட்சிகளுடன் கலந்துரையாடி இந்த விடயத்தில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படும் என விக்னேஸ்வரன் நேற்று ஐ.பி.சி தமிழின் செய்திப்பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.
இவ்வாறான கருத்தை தெரிவித்த அவர், சிறிலங்கா அரசாங்கத்துடன் அதிகமாக முரண்படக்கூடாது என்பதால் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இந்த விடயத்தில் தொடர்ந்தும் பின்னடிப்பதாகவும் ஒரு விமர்சனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் விக்னேஸ்வரன் முன்வைத்த இந்த விமர்சனத்தை இன்று செல்வம் அடைக்கல நாதன் விமர்சித்ததுடன் இது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.