இனப்பிரச்சினை தீர்வுக்காக ஒன்றிணையும் தமிழ்க் கட்சிகள் : சத்தியலிங்கம் எம்.பி
இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படவேண்டும் என்பதற்காக தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் (P. Sathiyalingam) தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் (Vavuniya) இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படவேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக இருக்கின்றது.
தமிழ் மக்களின் நிலைப்பாடு
அவ்வாறான சந்தர்ப்பம் ஏற்படும் போது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் குரலாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகள் ஒன்றாக இணைந்து தமிழ் மக்களின் நிலைப்பாடு இதுதான் என்பதை அரசுடனான பேச்சுவார்த்தையின் போது முன்வைக்க வேண்டும்.
இதுதான் கட்சியின் நிலைப்பாடகவும் இருக்கும். இது தொடர்பாக எமது கட்சியின் மத்திய குழுவில் ஆராய்ந்து உரிய முடிவை எடுப்போம்.
தமிழரசுக்கட்சியின் (ITAK) செயலாளர் என்ற வகையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஈபி.ஆர்.எல்.எப் (EPRLF), புளொட் (PLOT), ரெலோ (TELO)ஆகிய கட்சிகளுடன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையினை நடாத்தியிருந்தோம்.
தனித்து நின்ற தமிழரசுக்கட்சி
அப்போது தாங்கள் அனைவரும் ஒருகூட்டாக இருக்கிறோம், தமிழரசுக்கட்சிதான் தனித்து உள்ளது. எனவே நீங்கள் வந்து எமது சின்னத்தில் கேட்கலாம் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருந்தனர்.
அந்தவகையில் திருகோணமலையில் (Trincomalee) ஒன்றாக போட்டியிட்டமையினாலேயே ஒரு பிரதிநித்துவத்தை தக்க வைக்கக்கூடியதாக இருந்தது. எனவே நாங்கள் முயற்சிகளை எடுத்திருக்குறோம்.
கடந்தமுறை உள்ளூராட்சி தேர்தல் முறைமையினால் அதில் தனித்தனியாக போட்டியிட்டு பின்னர் ஒன்றாகலாம் என்ற ஆலோசனையினை முன்வைத்திருந்தோம்.
பொதுவான நோக்கத்திற்காக ஒன்றுபடல்
ஏனெனில் அந்த தேர்தலில் வட்டார அடிப்படையில் நாம் பெரும்பாண்மையாக வெற்றிபெற்றாலும் உள்ளூராட்சி அமைப்புக்களில் ஆட்சியை பிடிக்கமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
அதனை தவறுதலாக புரிந்துணர்ந்த ஏனைய கட்சிகள் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டிருந்தமை உங்களுக்கு தெரியும். இருப்பினும் அரசியல் அமைப்பு தீர்வு விடயத்தில் நாங்கள் அனைவரும் ஒருதரப்பாக பயணிக்க வேண்டும் என்பது எனது கருத்து.
தமிழ்த்தேசிய கட்சிகள் இடையே வடகிழக்கில் அதிகமான பிரதிநிதித்துவத்தை எமது கட்சிபெற்றுள்ளது. அத்துடன் எமது கட்சி 75வருட வரலாற்று பாரம்பரியம் கொண்ட தாய்க்கட்சி. எனவே தமிழ்கட்சிகளை பொதுவான நோக்கத்திற்காக ஒன்றுபட்டு செயற்படுவதற்கான நடவடிக்கையினை நாம் எடுப்போம்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |