புலம்பெயர் முதலீடுகளை தடுக்க முனையும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள்
போரினால் அழிவுகளை எதிர்கொண்டுள்ள தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் புலம்பெயர்ந்த தமிழர்களின் அந்நிய முதலீடுகளுக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு வெளியிடுகின்றமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈழத் தமிழரின் பாரிய முதலீட்டுடன் யாழ்ப்பாணத்தின் கிரீமலைப் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள தகவல் தொழில்நுட்ப பல்கலைகழகத்திற்கு காணிகளை வழங்குவது தொடர்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு வெளியிடுவதானது எதிர்கால முதலீடுகளை பாதிக்க செய்யும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் மக்களது பிரதிநிதிகளின் எதிர்ப்பு
யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் அதிபர் மாளிகையானது தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்காக சிலிட் எனப்படும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சுமார் 50 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழரும் கனேடிய முதலீட்டாளருமான இந்திரகுமார் பத்மநாதனுடன் இணைந்து இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம், அதிபர் மாளிகையை தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்யவுள்ளது.
northern Uni தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக அதிபர் மாளிகை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், இதில் ஈழத் தமிழரான இந்திரன் பத்மநாதன் தலைமையிலான கனேடிய நிறுவனம், அண்ணளவாக 5000 மில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளது.
கடந்த முப்பது வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடமாகாண இளைஞர், யுவதிகளின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தி, பூரணப்படுத்துவதன் ஊடாக எதிர்கால நவீன உலகிற்கு பொருந்துபவர்களாக அவர்களை மாற்ற முடியும் என இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
எனினும் ஈழத் தமிழர் ஒருவரின் முதலீட்டுடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களின் நலன்சார்ந்து சிந்தித்து செயற்படுத்தப்படும் இந்த பல்கலைகழக நிர்மாணத்திற்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களே எதிர்ப்பு வெளியிடுகின்றமை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
ஊக்கமிழக்கச் செய்யும் செயற்பாடு
பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு, முதலீடுகளை மேற்கொள்ளும் புலம்பெயர்ந்த தமிழர்களை மேலும் ஊக்கமிழக்கச் செய்யும் வகையில் தமிழ் தலைவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக துறைசார்ந்தவர்களும் பொதுமக்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளுக்கே தமிழ் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு வெளியிடும் போது, எதிர்காலத்தில் வெளிநாட்டு முதலீடுகள் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு இல்லாது போகும் அபாயங்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் அனுமதி பெறப்படாமல், தனியார் முதலீட்டிற்கு எவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு என் கனவு யாழ் என்ற திட்டத்தை முன்வைத்திருந்த அங்கஜன் இராமநாதன், அரசாங்க தரப்பிற்கு ஆதரவு வழங்கும் ஒருவராக இருந்த போதிலும் யாழ்ப்பாணத்திற்கு உருப்படியான முதலீடுகளையோ அபிவிருத்திகளையோ செய்யாத நிலையில், தற்போது கொண்டுவரப்படும் முதலீடு தொடர்பாக கேள்வி எழுப்புகின்றமை சரியானதா என மக்கள் வினவுகின்றனர்.
வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாக தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாத அங்கஜன் இராமநாதன், தற்போது வேலைவாய்ப்புகளையு உருவாக்க கூடிய northern Uni தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு வெளியிடுவதிலுள்ள பின்னணி குறித்தும் மக்கள் தமது சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.
ஒப்புதல் அளிக்க மறுப்பு
இதேவேளை, யாழ்ப்பாணம் கீரிமலையில் உள்ள அதிபர் மாளிகை அமைந்துள்ள பிரதேசத்தை நகர அபிவிருத்தி சபைக்கு வழங்கும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடப்பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருடமான எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் சுமந்திரன் இதனை சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தகவல் தொழில்நுட்ப பல்கலைகழகம் அமையவுள்ள பகுதிகளில் உள்ள தனியார் காணிகளுக்கான இழப்பீடுகளையும் கனேடிய முதலீட்டாளர் வழங்குவதற்கு முன்வந்துள்ள நிலையில், அது தொடர்பாக சாதகமாக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மாறாக தமிழ் அரசியல் தலைவர்கள் எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டுவருகின்றமை கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களின் முதலீடுகளுக்கு எதிர்ப்பு
இவ்வாறு தமிழர்களின் முதலீடுகளுக்கு எதிர்ப்பு வெளியிடுவதானது போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகத்திலுள்ள மக்களை மாத்திரமல்லாமல், அவர்களின் சந்ததிகளின் எதிர்காலத்தையும் கேள்விக்குட்படுத்தும் வகையில் உள்ளதாக துறைசார்ந்தவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக புலம்பெயர் ஈழத் தமிழரான இந்திரகுமார் பத்மநாதனின் முதலீட்டுடன் உருவாக்கப்படும் தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, அண்டை நாடான இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி கற்க வாய்ப்பு அளிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சுமார் 1500 மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப அறிவை வழங்கும் திறன் கொண்டதாக அபிவிருத்தி செய்யப்படும் இந்த பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர், வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகள் தகவல் தொழில்நுட்பம் கற்கைகளுக்காக கொழும்புக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகவே இந்தப் பல்கலைகழகத்தின் நிர்மாணப் பணிகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி, எதிர்கால ஈழத் தமிழ் மாணவர்களின் கல்வி இருப்பதை உறுதி செய்வதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் துணை நிற்க வேண்டுமே தவிர அதனை சீர்குலைக்கும் வகையில் செயற்படக் கூடாது என்பதே அனைத்து தமிழ் மக்களினதும் விரும்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.