கூச்சல் அரசியலும் குழிதோண்டி புதைக்கப்படும் தமிழ் தேசியமும்...!
அரசியல் வெற்றிடம் நிலவும் சூழலில், மக்களின் உணர்ச்சிகளை மூலதனமாக வைத்து ஒரு ஹீரோ பிம்பத்தை உருவாக்கிய ஒரு அரசியல் தலைமை, இன்று வடபுலத்தின் அரசியல் நாகரீகத்தைச் சிதைக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது.
வெறும் சத்தத்தாலும், ஆவேசத்தாலும் மட்டுமே அரசியல் நடத்திவிடலாம் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் தலைமை நம்புவது, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகவே அமைகின்றது.
குறிப்பாக, தமிழ் தேசியத்தின் முதுகில் குத்தும் துரோகமாகவே தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரத்தில் வெளிப்பட்ட கருத்துக்கள் அமைகின்றன.
அத்துமீறி அமைக்கப்பட்ட ஒரு விகாரையை நியாயப்படுத்துவதற்காக அந்த நிலத்தின் பூர்வீகக் குடிமக்களின் உரிமைகளை ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் நிராகரித்தது மன்னிக்க முடியாத அரசியல் துரோகம் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.
சட்டவிரோத ஆக்கிரமிப்பு விகாரையை, மரபுவழி வந்த நல்லூர் கந்தசுவாமி கோயிலுடனும் கத்தோலிக்க தேவாலயங்களுடனும் ஒப்பிட்டது வரலாற்று அறிவின்மையையும், திட்டமிட்ட திசைதிருப்பல் அரசியலையுமே காட்டுகின்றது.
1983 கறுப்பு ஜூலை அச்சத்தைக் காட்டி தமிழ் மக்களை அடிபணியச் சொல்லும் இவ்வாறான கருத்துக்கள், உண்மையில் பேரினவாதத்தின் குரலாகவே ஒலிக்கின்றன.
இதனுடன் அண்மைய காலங்களில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் இத்தலைமைகள் காட்டும் அடாவடித்தனம், இவர்கள் மக்கள் பிரதிநிதிகளா அல்லது தெருச்சண்டைக்காரர்களா என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றது.
மக்கள் பணிகளில் குறைபாடுகள் இருந்தால் அதைச் சுட்டிக்காட்ட சட்டரீதியான வழிகள் பல உள்ளன.
அதை விடுத்து, அரச அதிகாரிகளை ஒருமையில் பேசுவதும், தகாத வார்த்தைகளால் நிந்திப்பதும் தரம் தாழ்ந்த அரசியல் கலாசாரத்தின் வெளிப்பாடு.
ஆக்கபூர்வமான விவாதங்கள் நடக்க வேண்டிய இடங்களை ஒற்றை நபர் கரகாட்டமாக (One-man show) மாற்றுவதன் மூலம், யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திப் பணிகள் திட்டமிட்டு முடக்கப்படுகின்றன.
இன்றைய பல தமிழ் தலைமைகளின் அரசியல் கொள்கைகளைச் சார்ந்தது அல்ல, அது வெறும் கவன ஈர்ப்பு (Attention Seeking) உத்திகளால் ஆனது.
நாடாளுமன்றத்திலும் பொது இடங்களிலும் செய்யும் ஒவ்வொரு அநாகரீகச் செயலும், சமூக ஊடகங்களில் லைக் (Like) வாங்குவதற்காகவே திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்றன.
ஆக்கபூர்வமான அரசியலை விடுத்து, குழப்பத்தையே கொள்கையாகக் கொண்ட இவர்களை மாற்று அரசியல்வாதிகள் எனத் தமிழ் மக்கள் நம்புவது மிகப்பெரிய வரலாற்றுத் தவறாகவே முடியும்.
ஒரு தமிழ் பிரதிநிதி என்பவர் சர்வதேச ரீதியாகவும், தென்னிலங்கை அரசியல் களத்திலும் தமிழ் மக்களின் கௌரவத்தைப் பிரதிபலிப்பவர்.
ஆனால் இவர்களின் அநாகரீகமான நடத்தை, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் நாகரீகமற்றவர்கள் எனச் சிங்களப் பேரினவாதம் சித்தரிப்பதற்குக் களம் அமைத்துக் கொடுக்கின்றது.
இவ்வாறு தமிழ் மக்களின் அரசியல் களம் தமிழ் தலைமைகளினூடா எவ்வாறு சீர்க்குலைக்கப்படுகின்றது என்பது தொடர்பில் ஆராய்கின்றது இந்த காணொளி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |