தமிழ் பொது வேட்பாளர் விவகாரம்: சீ.வீ.கே. சிவஞானம் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு
தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் முடங்கிப் போய்விடும் என்றும் இந்த வேலைகள் எல்லாம் முடக்கப்பட்டுவிடும் என்ற பாணியில் சீ.வீ.கே. சிவஞானம் (C. V. K. Sivagnanam) போன்றோர் கருத்து தெரிவித்து வருவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) குறிப்பிட்டுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “ பொது வேட்பாளர் முயற்சி என்பது தோற்றுப் போக வேண்டும் என்று பல பேர் விரும்புகிறார்கள்.
குழப்புவதற்கான முயற்சி
அதில் சீ.வீ.கே. சிவஞானமும் ஒருவராக சில சமயம் இருக்கலாம். ஏனென்றால் இந்த இந்த விடயம் வெற்றிகரமாக நகருமாக இருந்தால் சிங்கள தரப்பு மாத்திரம் அல்ல சர்வதேச சமூகம் கூட அந்த ஆணையை பற்றி சிந்திக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்படும்.
ஆகவே ஏதோ ஒரு வகையில் இதனை குழப்புவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு தான் வருகின்றன, இது மேலும் நகர கூடாது. முடக்கப்பட வேண்டும் என்றும் சிந்திக்கிறார்கள்.
இவ்வாறு இதனை முடக்கினால் சந்தோசப்படுவதற்கும் சில பேர் இருப்பதாகத் தான் எங்களுக்கு தோன்றுகிது. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் பொது வேட்பாளர் என்ற விடயம் இப்பொழுது முன்னோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, கட்சிகளில் ஓரிருவரை தவிர மற்றைய அனைவரும் இதற்கு பின்னால் இருக்கின்றார்கள்.
கட்டுக் கதை
முக்கியமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது அதிபர் தேர்தலை பகிஷ்கரிப்பு செய்ய வேண்டும் என்று இப்பொழுது ஒரு துண்டு பிரசுரம் அடித்து வெளியிடுவது மாத்திரம் அல்லாமல் இந்த முயற்சிகளுக்கு எதிரான கட்டுக் கதைகளையும் அவிழ்த்துவிட்டு வருகின்றார்கள்.
இன்னும் சில பேர் பகிஷ்கரிப்பும் பொது வேட்பாளரும் ஒன்றுதான் என்ற விதமான கருத்துக்களையும் சொல்லி வருகின்றார்கள், உண்மையில் பகிஷ்கரிப்பும் பொது வேட்பாளரை நிறுத்துவதும் ஒன்றல்ல.
இந்த தேர்தலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. இந்த தேர்தலுக்கு நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவசியமில்லை என்ற கருத்தைத்தான் அவர்கள் முன்வைக்க முயற்சிக்கின்றார்கள்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |