முல்லைத்தீவினைச் சேர்ந்த அரசியல் கைதி விடுதலை!
முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த அரசியல் கைதியான நடேசு குகநாதன் கொழும்பு நீதவான் நீதிமன்றினால் இன்று(16) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டினைச் சேர்ந்த நடேசு குகநாதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து 2009.05.19 ஆம் திகதி படையினரால் கைதுசெய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் 2012.03.24 அன்று தொடக்கம் ஒரு ஆண்டு புனர்வாழ்வு பெற்று 2013.03.23 அன்று விடுதலை செய்யப்பட்டார்.
அதன் பின்னர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில் 2013.07.09 ஆம் திகதி அன்று தொலைபேசிமூலம் விசாரணைக்காக அழைத்து மீண்டும் கைதுசெய்து பூசா சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் 2015ஆம் ஆண்டு நியூமகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
எனவே தற்போது நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று சில சிறைச்சாலைகளுக்கும் பரவியுள்ளதாக அறியப்படுகின்றது. இந்த நோய் தொடர்பில் பிள்ளைகளும் தந்தையினை பற்றி மிகுந்த கவலை தெரிவிக்கின்றார்கள், இந்த நோயில் இருந்து பாதுகாப்பதற்காக ஜனாதிபதி கருணைகூர்ந்து தனது கணவரை பிணையிலாவது விடுதலை செய்து தருமாறு கடந்த ஆண்டு மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைவாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (16) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் மனைவி இவரின் விடுதலைக்காக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு 100 இற்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.