கனடாவில் தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை : பறிபோகவுள்ள வேலைவாய்ப்பு
கனடாவில் இந்த வருடம் (2026) மட்டும் 4,000 வரையிலான உணவகங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதால் தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டவர்கள் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஊழியர்களுக்கான சம்பளம், காப்புறுதி மற்றும் வாடகை ஆகியவற்றுக்காக உணவக உரிமையாளர்கள் செலவழிக்கும் தொகை சடுதியாக அதிகரித்துள்ள ளதால் பல உணவகங்கள் தங்கள் வர்த்தகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவகங்களுக்கு செல்பவர்கள் தொகையில் வீழ்ச்சி
அத்துடன் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், உணவகங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையிலும் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் உணவகங்கள் அதன் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் திணறி வருவதாக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதேவேளை, மதுபான விற்பனை குறைந்து வருவதும் மற்றுமொரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
முக்கிய வருமான ஆதாரத்தை இழந்துள்ள உணவகங்கள்
முன்பு மதுபான விற்பனை உணவகங்களுக்கு அதிக இலாபத்தை ஈட்டி தந்ததால் செலவுகளை ஈடுகட்ட முடியுமாக இருந்தது. ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காகவும் வீண் செலவுகளை தவிர்ப்பதற்காகவும் மக்கள் இப்போது குறைவாகவே மதுபானம் அருந்துகின்றனர். இதனால், உணவகங்கள் ஒரு முக்கியமான வருமான ஆதாரத்தை இழக்கின்றன.

இந்நிலையில், உள்ளூர் சமூகங்களுக்கு தனித்துவமான உணவுகளை வழங்கும் சிறு உணவகங்கள் இவற்றால் அதிகமாக பாதிக்கப்படுகின்றன.
இதன் காரணமாக பெருந்தொகையான உணவகங்கள் மூடப்படவுள்ளதால், பலர் வேலைவாய்ப்பினை இழக்கவுள்ளனர். கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிகளவான தமிழர்கள் உணவகங்களில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |