கட்டுநாயக்க வந்த விமானத்தில் கைவரிசையை காட்டிய சீன நாட்டவர்!
துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இலங்கை பயணி ஒருவரிடமிருந்து ரூ.1,344,400 மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் தங்க நகைகளை திருடிய சீன நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விரிவான முயற்சிகளுக்குப் பிறகு சந்தேகநபர் கைது செய்யப்பட்டள்ளார்.
தகவல்களின்படி, திருடப்பட்ட பணம் மற்றும் நகைகள் இஸ்ரேலில் குழந்தை மேம்பாட்டு ஆலோசகராகப் பணிபுரியும் பொரலஸ்கமுவவைச் சேர்ந்த 52 வயது இலங்கைப் பெண்ணுக்குச் சொந்தமானது என கூறப்படுகிறது.
சிசிரிவி சோதனை
அவர் நேற்று (ஜனவரி 13) காலை 8.15 மணிக்கு அபுதாபியிலிருந்து ஃப்ளை துபாய் FZ 579 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

விமானப் பணிப்பெண்ணின் வேண்டுகோளின் பேரில், விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்ட அவரது கைப்பை, அவரது இருக்கைக்கு மேலே உள்ள மேல்நிலை லக்கேஜ் ரேக்கில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அவர் இறங்கி விமான நிலையத்தில் ஒரு வாடகை வண்டிக்கு பணம் செலுத்தத் தயாரானபோது, அவரது கைப்பையில் USD 3,660, EUR 500 மற்றும் ஒரு அளவு தங்க நகைகள் காணாமல் போயுள்ளதை அறிந்துள்ளார்.
உடனடியாக அவர் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினரிடம் முறைப்பாடு அளித்த நிலையில், காவல்துறையினர் அவருடன் சேர்ந்து விமான நிலையத்தின் சிசிரிவி அமைப்பை சோதனை செய்து பார்த்துள்ளனர்.
கைது நடவடிக்கை
அதன்போது, அந்தப் பெண்ணின் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட ஒரு சீன நாட்டவரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

விசாரணையில், சந்தேக நபர் ஏற்கனவே விமான நிலையத்தை விட்டு வெளியேறி, கிம்புலாபிட்டிய பகுதியில் உள்ள ஒரு சீனப் பெண்ணால் நடத்தப்படும் ஒரு தங்குமிடத்தில் மறைந்திருப்பது தெரியவந்தது. அங்கு சென்று காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 25 வயதான சந்தேக நபர், திருடப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகள் அனைத்தையும் அவர் தூங்கிக் கொண்டிருந்த படுக்கையின் தலையணை உறைக்குள் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சீன நாட்டவர் இன்று (ஜனவரி 14) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |