தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தினம் இன்று
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 47 வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகின்றது.
இதற்கமைய தந்தை செல்வாவின் 47 வது ஆண்டு நினைவு தினம் இன்றையதினம்(26) காலை யாழ். தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் இடம்பெற்றது.
தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் தலைவர் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
தந்தை செல்வா
ஆரம்ப நிகழ்வாக தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன் அன்னாரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நினைவுப் பேருரையினை யாழ் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானதுறை பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் இலங்கை தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்பு களும், சவால்களும் என்னும் கருப்பொருளில் உரையாற்றினர்.
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், முன்னாள் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், தந்தை செல்வா நினைவு அறக்காவற் குழுவின் உபதலைவர் குலநாயகம், தமிழரசுக்கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சோ.மாவை சேனாதிராஜா, வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.சிவஞானம்,பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மலர் அஞ்சலி
அத்துடன் வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று நினைவு கூரப்பட்டது.
வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நினைவு தினம்
இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தின நிகழ்வு மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வாவின் நினைவு பூங்காவில் இடம்பெற்றது.
இலங்கை தமிழரசு கட்சியின் பிரதிநிதிகள், வாலிபர் முன்னணியினர், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், கட்சியின் ஆதரவர்கள், என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |