எல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தங்காலை நகர சபையில் இறுதி அஞ்சலி
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களின் உடல்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அதற்கமைய இதுவரை 10 பேரின் உடல்கள் நகர சபைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்காலை பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணமாக சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து, நேற்று முன்தினம் (04) எல்ல காவல்துறை பிரிவுக்குட்பட்ட எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் 24வது கிலோமீற்றர் தூண் அருகே உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.
15 பேர் உயிரிழப்பு
இந்த விபத்தில் தங்காலை நகர சபை செயலாளர் டி.டபிள்யூ. கே. ரூபசேன உட்பட நகர சபையின் 12 ஊழியர்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் பேருந்து சாரதி ஆகியோர் உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்த 18 பேர் பதுளை போதனா வைத்தியசாலை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் விபத்துக்குள்ளான பேருந்து, 2023 ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பதிவு ரத்து செய்யப்பட்டிருந்ததாக போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
