ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தை ஒருபோதும் அனுமதியோம் - அரசாங்கம் அறிவிப்பு
இலங்கையில் ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் மீளத்திறக்க முடியும் எனவும் அவர் நேற்று நம்பிக்கை வெளியிட்டார்.
இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பலர் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது முல்லைத்தீவிலுள்ள விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே சம்பளப்பிரச்சினை உள்ள நிலையில் தற்போது ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அரசாங்கத்தினால் குறித்த நபர்கள் தனிமைப்படுத்தியமைக்கு எதிராக நாட்டில் உள்ள 14 ஆசிரியர்கள் சங்கங்கள் இரண்டாவது நாளாக இன்றும் இணைய வழியான பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே பாடசாலைகள் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக மேலும் இக்கப்பட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆசிரியர்கள் நடத்திவருகின்ற போராட்டத்தை தாம் அனுமதிக்கப் போவதில்லை என்றும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இதுகுறித்து பேச்சு நடத்தவிருப்பதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.