குடும்பங்கள் பிரியும் நிலை : யாழில் நாளைமுதல் தொடர் போராட்டத்தில் குதிக்கவுள்ள ஆசிரியர்கள்
சுற்றுநிருபத்துக்கேற்ப அதை ஏற்று வெளி மாவட்டங்களில் சேவை செய்யச் சென்ற எம்மை தேவை கருதிய சேவை இடமாற்றம் என்ற பெயரில் திட்டமிட்டு பழிவாங்குவதை ஏற்க முடியாதெனக் கூறி போராட்டத்தை முன்னெடுத்துள்ள பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தமக்கு நியாயம் கிடைக்கும் வரை நாளை(14) காலை 8 மணிமுதல் வடக்கின் ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
பல வருடங்களாக வெளி மாவட்டங்களில் பணிபுரிந்த நிலையில் இடமாற்றம் என்ற பெயரில் மீண்டும் வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் தமக்கு நியாயம் கோரி இன்று வடக்கின் ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
ஆசிரியர்களின் குடும்பங்கள் பிரியும் நிலை
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர்சங்கம், தொடர்ந்தும் குடும்பத்தை விட்டு வெளி இடங்களில் சேவையை முன்னெடுப்பதால் ஆசிரியர்களின் குடும்பங்கள் பிரியும் நிலை உருவாகி வருவதாக சுட்டிக்கட்டியுள்ளது.
மேலும் தாபன விதிக் கோவைக்கு முரணாக, இடமாற்ற மேல்முறையீட்டுச் சபை என்ற போர்வையில் பழிவாங்கும் நோக்கத்துடன் இடமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக நாம் சேவையின் தேவை கருதிய இடமாற்ற சபையில் இருந்து வெளியேறியிருந்தோம்.
இதன் பின்னர் ஏற்கனவே 2025 ஆம் ஆண்டு சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் தவிர்க்கப்பட்ட ஒருவரை மீளவும் 2026 ஆம் ஆண்டுக்கான இடமாற்றத்திலும் உள்வாங்காது பழிவாங்கும் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், தொழில் சங்கத்தின் உறுப்பினர்கள் அவ்வாறானவர்களை மீளவும் தரவுகள் விவரங்கள் ஏதும் கைவசம் இல்லை எனகூறி இடமாற்றத்தில் உள்வாங்கியுள்ளனர்.
வெளிமாவட்டங்களில் 15 ஆண்டுகளாகவும் பணி
குறிப்பாக சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் நிபந்தனைகளுடன் வெளிமாவட்டங்களுக்கு இடமாறிச் சென்றவர்கள், தொடர்ச்சியாக 8 முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாக மட்ட்டுமல்லாது சிலர் 15 ஆண்டுகளாகவும் இவ்வாறு பணியாற்றி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது, அவ்வாறு பாதிக்கப்பட்டு வெளி மாவட்டத்தை ஒத்த வகையில் நெடுந்தீவு, மருதங்கேணி உள்ளிட்ட பகுதிகளில் இடமாற்றப்பட்டு சில மாதங்கள் கூட நிறைவுறாது சேவை செய்து வருபவர்களையும் மீண்டும் சேவையின் தேவை கருதிய இடமாற்றம் என்ற சூழ்ச்சிக்குள் வீழ்த்தி மீண்டும் வெளி மாவட்டங்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான இடமாற்றத்திலும் உள்வாங்கி பழிவாங்கியுள்ளனர்.
நீதியான இடமாற்றம் வழங்கப்பட வேண்டும்
ஆனால் குறித்த இடமாற்றங்களை நிறுத்தி சரியான தகவல்களை பெற்று, இதுவரைகாலமும் வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செல்லாது சலுகைகளுடன் இருப்பவர்களை அந்த பட்டியலில் உள்வாங்கி நீதியான இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக இருக்கின்றது இதை வலியுறுத்தியே போராட்டத்தையும் நாம் முன்னெடுத்திருக்கின்றோம்.
எமது போராட்டத்தின் ஒரு அங்கமாக இன்று வடக்கின் ஆளுநரை சந்தித்து எமது நிலைமைகளை எடுத்துக்கூறி தீர்வை கோரினோம். ஆனால் அவரும் தீர்வுக்கு பதிலாக முயற்சிப்பதாக கூறியுள்ளார். இது எமக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. இதனால் எமது போராட்டத்தை நாம் நாளை முதல் தொடரவுள்ளோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
