ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! முக்கிய சந்தேநபர்களை தேடி அவுஸ்திரேலியா பறக்கும் சிஐடி குழுவினர்
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பத்து விமானங்களைக் கொண்ட ஒரு விமானக் குழுமத்தை வாங்குவதற்காக, 2013-ஆம் ஆண்டில் ஒரு ஐரோப்பிய விமான நிறுவனத்திடமிருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பில் விசாரணை செய்ய விசேட காவல்துறை குழுவொன்று அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கவுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பான சந்தேக நபர்களையும் சாட்சிகளையும் தேடுவதற்காக, லஞ்ச விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒரு கூட்டு காவல்துறை குழுவே இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கவுள்ளதாக தெரியவருகிறது.
ஏர்பஸ் லஞ்சப் பரிவர்த்தனையில் பணம் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் வங்கிக் கணக்குகளை வைத்திருந்ததாகக் கூறப்படும், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சந்தேக நபர்கள் மற்றும் சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கும், ஆதாரங்களைக் கண்டறிவதற்கும் இந்தக் கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
முக்கிய சந்தேகநபர்கள்
லஞ்சப் பணம் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் வங்கிக் கணக்கின் உரிமையாளர் என்று கூறப்படும் டபிள்யூ. டி. நிமல் பெரேரா, அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாக லஞ்ச ஆணைக்குழு முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களான, உயிரிழந்த சிறிலங்கன் ஏயார்லைன்ஸின் முன்னாள் பணிப்பாளர் சி.டி.ஏ. கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமிந்திர ராஜபக்ச ஆகியோர் வெளிநாட்டில் உள்ளனர்.
அவர்களுக்கு எதிராக கொழும்பு மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் லஞ்ச ஆணைக்குழுவும், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சி.ஐ.டி.யும் இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளன.

புருனேயில் ஒரு போலி நிறுவனத்தை நிறுவியது மற்றும் ஒரு புகழ்பெற்ற ஐரோப்பிய சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனத்திடமிருந்து 1,454,645.54 யூரோக்கள் (இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள்) லஞ்சம் பெற்றது தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்