தனியார் மயமாகும் சிறிலங்கா டெலிகொம்:வெளியான அபாய அறிவிப்பு
சிறிலங்கா டெலிகொம்(Sri Lanka Telecom) நிறுவனத்தை தனியார் மயமாக்குவது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள சிறிலங்கா டெலிகொம் தனியார் மயமாக்கலினால் தேசிய பாதுகாப்பிற்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தாகும் தேசிய பாதுகாப்பு
சிறிலங்கா டெலிகொம் தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுப்பதற்கு முன்னர், தேசிய பாதுகாப்பில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு அமைப்பின் மீதான வெற்றிகரமான சைபர் தாக்குதல் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் மற்றும் ஆயிரக்கணக்கான தொலைபேசி பயனர்களின் சேவைகளை சீர்குலைக்கும், பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இணைய அணுகலை இழக்கும், வணிகங்களை முடக்கும் மற்றும் அரசாங்க செயற்பாடுகளை முடக்கும் என்றும் அறிக்கை கூறுகிறது.
செலவு அதிகரிக்கும்
அரச மற்றும் பாதுகாப்புத் துறைகளின் அனைத்து இணையத்தளங்களும் சிறிலங்கா டெலிகொம் ஊடாக பராமரிக்கப்படுவதாகவும் இதன் காரணமாக தனியார் நிறுவனத்திடம் இருந்து அந்த சேவைகளைப் பெறுவதற்கு அரசாங்கத்திற்கு ஆகும் செலவு அதிகரிக்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா டெலிகொம் நாட்டின் மிகப் பழமையான தொலைத்தொடர்பு சேவை வழங்குனராக இருப்பதால், அது பல தசாப்தங்களாக தரவு அமைப்பைக் கொண்டிருப்பதால், அது தனியார்மயமாக்கப்பட்டால், அந்தத் தரவுகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்குத் திறக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |