வெளிநாடொன்றில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்: பலர் பலி
சோமாலியா (Somalia) தலைநகரில் அல்-கொய்தாவின் கிளை அமைப்பான அல் ஷபாப் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில், சோமாலியா தலைநகர் மொகடிசுவில் (Mogadishu) உள்ள லிடோ கடற்கரை அருகே அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றிலேயே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த உணவகத்திற்குள் நுழைந்த அல் ஷபாப் அமைப்பினர் அங்கு இருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்கொலைப்படை தாக்குதல்
இதன்போது, சிலரை பணயக்கைதிகளாக சிறைபிடித்ததுடன், தங்கள் உடலில் மறைத்து கட்டிக்கொண்டு வந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கொடூர தாக்குதலில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில், தகவலறிந்து அங்கு வந்த பாதுகாப்புப் படையினர் அதிரடியாக செயல்பட்டு பணயக்கைதிகளை மீட்டுள்ளதுடன் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்றதாக தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |