இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தாய்லாந்து பிரதமர்
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் 76வது சுதந்திர விழாவில் கௌரவ அதிதியாக பங்கேற்கவுள்ளார்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, தாய்லாந்து பிரதமர் அதிபர் விக்ரமசிங்கவுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன், வரலாற்று சிறப்புமிக்க இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதையும் பார்வையிட உள்ளார்.
அதிபர் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல்
சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் தாய்லாந்தின் துணைப் பிரதமரும், வர்த்தக அமைச்சருமான பும்தம் வெச்சயாச்சாய் மற்றும் இலங்கையின் வணிக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ ஆகியோர் கைச்சாத்திடவுள்ளனர்.
மேலும், இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் வாயிலாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை அதிகரிப்பதற்கும், ஆசியான் பொருளாதாரங்களுடன் ஆழமான ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
விமான சேவைகள் ஒப்பந்தத்தை புதுப்பித்து, இலங்கையின் இரத்தினம் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தாய்லாந்தின் இரத்தினம் மற்றும் ஆபரண நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் இரு தரப்பினரும் எதிர்பார்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |