நீ பேசாமல் இரு : ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பியுடன் கடும் வாக்குவாதம்
வலிகாமம் வடக்கு - தெல்லிப்பளை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடந்தது.
யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத விகாரையிள் நிலைப்பாடு குறித்து ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீபவானந்தராஜாவிடம் கஜேந்திரன் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த அவர், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மட்டத்தில் கூட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு இருப்பதாகவும் விரைவில் தீர்வு வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த விகாரைக்கு ஆதரவாக காவல்துறையினரும் இராணுவத்தினரும் செயற்படுவதுடன் காணி உரிமையாளர்களுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுத்துவிட்டு தென்பகுதியில் இருந்து வருபவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாகவும், தங்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்குகளைப் பதிவு செய்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் அங்கே குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, காவல்துறை உங்களுக்கு எதிராக செயற்பட்டால் காவல்துறைக்கு எதிராக நீங்கள் வழக்குப் போட்டிருக்கலாம் என தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த கஜேந்திரன் எல்லா விடயத்திற்கும் வழக்குப் போட முடியாது என பதிலளித்த போது, எனக்கு யாரும் அடித்தால் எனக்கு வழக்கிற்கு போக முடியாது என்றால் அவர்களை சுட முடியுமா என அர்ச்சுனா கேள்வியெழுப்பினார்.
இதனையடுத்து சபையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தநிலையில் பலாலி காவல்துறையினர் இனவாதமாக செயற்பட்டனர் என கஜேந்திரன் தெரிவித்த நிலையில் நீங்கள் போக்குவரத்துக்கு இடையூறு விளைவீத்தீர்கள் என்னிடம் ஆதாரம் இருக்கின்றது என அர்ச்சுனா தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த கஜேந்திரன், அர்ச்சுனா நீ பேசாமல் இரு, உன்னிடம் ஆதாரம் இருந்தால் நீ போய் வழக்கு போடு, தேவையில்லாமல் கதைக்க வேண்டாம் என தெரிவித்தார்.
இந்தநிலையில் சபையில் மீண்டும் வாக்குவாதம் வலுத்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |