அரசியல் மயப்படுத்தப்பட்ட தாஜூதீன் கொலை: குற்றம் சுமத்தும் மொட்டு தரப்பு
ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை விவகாரம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் தேர்தல்கள் நடத்தப்படும் காலங்களில், அதற்கு ஏற்றாற் போல் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் தாஜூதீன் கொலை விடயம் வெளிப்படுத்தப்பட்டு வருவதாகவும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம்
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “நல்லாட்சி அரசாங்கத்தின் போதும் கூட இவ்விடயம் தொடர்பில் எம் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
தாஜூதீன் கொலை தொடர்பில் உண்மையிலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா அல்லது அரசியல் நோக்கங்களுக்காக இவ்விடயம் வெளிப்படுத்தப்படுகின்றதா என்றொரு சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
இந்நிலையில், இவ்விடயத்தில் குறிப்பிட்ட ஒரு தரப்பினரை மாத்திரம் குறி வைத்து பொய் சாட்சியங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஆகவே, வசீம் தாஜூதீன் கொலை விவகாரத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தாமல் பக்கசார்பற்ற விதத்தில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.“ என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
