அரசாங்கத்தால் முடியவில்லை! ரணிலிடம் ஒப்படையுங்கள் - ஐ.தே.க கோரிக்கை
அதிகரித்துச் செல்லும் பொருட்களின் விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் கி்டையாது. அதனால் பொருட்களின் விலையை தீர்மானிக்கும் அதிகாரத்தை அரசாங்கம் வியாபாரிகளிடமும் நிறுவனங்களிடமும் வழங்கி ஒதுங்கிக்கொண்டுள்ளது.
இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருட்களின் விலைவாசி தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் அனுபவமுள்ள ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wikramasinghe) ஒப்படைக்க வேண்டும்.
மக்களைவிட வியாபாரிகளே அரசாங்கத்துக்கு முக்கியமாகும். அதனால்தான் பொருட்களின் விலைகளை தீர்மானிக்கும் அதிகாரத்தை அரசாங்கம் வியாபாரிகளிடமும் நிறுவனங்களிடமும் ஒப்படைத்துள்ளது.
அத்துடன் நாடு பொருளாதார ரீதியில் இந்தளவு வங்குராேத்து நிலைக்கு செல்வதற்கு காரணம், ஆட்சியாளர்களின் பலவீனமாகும்.
தனக்கு அரசியல் அனுபவம் இல்லை என சிறிலங்கா அரச தலைவர் அமைச்சரவையில் தெரிவித்திருந்தார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அரசியல் அனுபவம் இல்லை என்பதையே நாங்கள் ஆரம்பத்திலேயே தெரிவித்தோம்.
அரச தலைவர் இப்போதாவது அதனை ஏற்றுக்கொண்டுள்ளதை வரவேற்கின்றோம்.
அதனால் நாட்டை ஆட்சி செய்ய அரசியல் அனுபவம் இல்லை என்றால், அது தொடர்பில் அனுபவம் உள்ள ஒருவருக்கு வழங்கவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.