கோட்டாபயவின் உரையில் மழுங்கடிக்கப்பட்ட உண்மை - எதிரணி எம்.பி கண்டனம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று ஆற்றிய உரையில் உண்மை மழுங்கடிக்கப்பட்டு பொய் தலை தூக்கியுள்ளதாக கண்டனம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்ததாவது,
ருவன்வெலிசாயவைப் போன்ற பின்புல தோற்றத்தை தொழிநுட்பத்தினூடாக போலியாக உருவாக்கி ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார். இதன் ஊடாக மீண்டும் மக்கள் மத்தியில் பௌத்தம், சிங்களம் என்ன எண்ணப்பாட்டை தோற்றுவித்து அவர்கள் மனதில் இடம்பிடிக்கவே ஜனாதிபதி முயற்சித்துள்ளார்.
தேர்தலின் போது எனக்கு உதவியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பதற்காக எம்மீது குறைகூறுகின்றனர். இதனால் உண்மை மழுங்கடிக்கப்பட்டு பொய் தலைதூக்கியுள்ளது என்று ஜனாதிபதி தெரிவித்தார். அவ்வாறெனில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்னர் மக்கள், சகாக்கள் அல்லது ஏனையோரிடம் இரகசிய ஒப்பந்தங்களை செய்து கொண்டு தற்போது அவற்றை நிறைவேற்றியமையின் காரணமாகவா எதிர்ப்புக்கள் மேலெழுந்துள்ளன என்று கேள்வியெழுப்புகின்றோம்.
ஜனாதிபதியின் உரையிலும் உண்மையை மழுங்கடித்து பொய் தலைதூக்கியுள்ளது. இவ்வாறு உண்மையை மறைப்பதற்காகவே ருவன்வெலிசாயவைப் போன்ற பின்புல தோற்றத்தை தொழிநுட்பத்தினூடாக போலியாக உருவாக்கி உரையாற்றியுள்ளார். இவ்வாறு தொழில்நுட்பத்தின் ஊடாக போலியான பின்புல தோற்றத்தைக் காண்பித்துள்ளமையின் ஊடாகவே ஜனாதிபதி பாரிய தோல்வியடைந்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.