ஒருவரின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த சிறுவனின் சாரத்தியம்- தந்தை மகன் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
மஹபாகே காவல்துறை பிரிவில் வெலிசறை பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவனும் அவரது தந்தையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரையும் வெலிசறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக மஹபாகே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவயருகையில்,
நேற்று காலை கொழும்பிலிருந்து நீர் கொழும்பு நோக்கி சொகுசு ஜீப் வண்டியை 16 வயது சிறுவன் செலுத்திச் சென்றுள்ளார். அதன் போது மஹபாகே காவல்துறை பிரிவில் வெலிசறை பகுதியில் வைத்து, நீர் கொழும்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கார், ஒரு முச்சக்கர வண்டி மற்றும் இரு மோட்டார் சைக்கிள்களை மோதியுள்ளது.
விபத்தில் 5 பேர் படுகாயமடைந்து, உடனடியாக கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 51 வயதான மஹபாகே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய நால்வர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 வயதான இளைஞன் செலுத்திய ஜீப் வண்டி, கட்டுப்பாட்டை இழந்தே பாதையின் எதிர்த்திசையில் பயணித்த நான்கு வாகனங்களை மோதித் தள்ளியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என காவல்துறையின் ஆரம்ப விசாரணைகளைின் பின்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆகவே விபத்தை ஏற்படுத்திய தனது 16 வயது மகனுக்கு வாகனம் செலுத்த சந்தர்ப்பம் அளித்தமைக்காக அவரது தந்தையையும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.