கொரோனா தடுப்பு வேலைத்திட்டம் தோல்வியடைந்துள்ளது - தாதியர் சங்கம்
கொரோனா தடுப்பு வேலைத்திட்டம் தற்போது தோல்வியடைந்துள்ளதால், அரசாங்கம் உடனடியாக இது தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையாற்றும் சுமார் 500 தாதியருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மெதவத்த (S.P. Medawatta) தெரிவித்துள்ளார்.
இவர்களில் கர்ப்பிணி தாய்மார் மற்றும் இரண்டு வயதுக்கும் குறைந்த பிள்ளைகள் இருக்கும் 50க்கும் மேற்பட்ட தாதியர்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய வைத்தியசாலையில் மாத்திரம் 200 தாதியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன் இவர்களில் 21 பேர் கர்ப்பிணி தாய்மார் எனவும் சொய்சா பெண்கள் மருத்துவனையில் 5 கர்ப்பணி தாய்மார் இருப்பதாகவும் கண்டி வைத்தியசாலையில் நான்கு கர்ப்பிணி தாய்மார் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மீண்டும் பரவி வரும் கொரோனா காரணமாக கர்ப்பிணிகளான தாதிமார் மற்றும் பாலுட்டும் தாய்மாரின் நிலைமை பாரதூரமாக மாறக் கூடும் என்பதால், அவர்களுக்கு விசேட விடுமுறை அனுமதியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் மெதவத்த குறிப்பிட்டுள்ளார்.
தொற்றுக்கு உள்ளான தாதிமார் ஒரு வாரத்திற்கு பின்னர் மீண்டும் சேவைக்கு அழைக்கப்படுவதால், தொற்று பரவுவது மேலும் இலகுவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
