ஆயிரம் சிறுவர்களை காவுகொண்ட ஈழ இனப்படுகொலைப் போர்
இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்று சிறிலங்கா அமைச்சர் விஜித ஹேரத் ஒரு புறம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்னொரு புறத்தில் இலங்கையில் போரே நடக்கவில்லை என்று இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா கூறுகிறார்.
ராஜபக்சக்கள் தாம் நடாத்தியது வீரப் போர் என்றார்கள். ஐந்தாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்று எண்ணிக்கையைக்குறைத்தேனும் இனப்படுகொலைக்கு ஒபுத்தல் வாக்குமூலம் செய்தார்கள்.
ஆனால் ராஜபக்சக்களை விடவும் நூதனமான இனவாத தரப்பு இன்று போரில் இனப்படுகொலை நடக்கவில்லை என்கிறது.
குழந்தையை காணாமல் ஏங்குகிற தாய்
பன்னாட்டுச் சூழலில் ஈழ இனப்படுகொலையின் தாக்கங்கள் பரவத் தொடங்குகையில் இனப்படுகொலையாளிகள் இவ்விதமாகப் பேசி தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முற்படுவது ஆச்சரியத்திற்குரியல்ல.
இனவழிப்பு என்ற சொல்லைப் பகிர்ந்தாலே சட்டம் பாயும் என்கிற அரசின் நிலைப்பாடு, ஈழத் தமிழர்கள் எப்படியான இனவழிப்புச் சூழலில் வாழ்கிறார்கள் என்பதை சர்வதேசம் இன்னமும் புரியச் செய்யும்.இன்று (மே 25) காணாமற் போன குழந்தைகளுக்கான சர்வதே தினம்.
காணாமல் போகும் எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு அரசு மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த நாள் வருடம்தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இலங்கையில் ஒரு அரசினால் பல நூறு சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்பது வேறு கதை.
ஒரு திருவிழாவில் குழந்தைகள் காணாமல் போவதையும் அதனால் ஏற்படுகிற துயரத் தெறிப்பையும் நமது சூழலில் நன்றாகப் பார்த்திருக்கிறோம். குழந்தையை காணாமல் ஏங்குகிற தாய், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் படுகிற துயரமும் விடுகிற கண்ணீரும் எதிர்கொள்ளுகிற அலைச்சலும் பார்க்கிற மனித மனங்களை பெரும் அவலத்தில் தள்ளிவிடும்.
அதேபோலத்தான் காணாமல் போகிற குழந்தை தன் தாய், தந்தையை சேரும் வரையிலான துயரமும். இதுவே இப்படியெனில் ஈழத்தில் போரில் காணாமல் போகிற குழந்தைகளின் கதைகளும் கணங்களும் எப்படியானவையாக இருக்கும்?
தாய்மார்களின் மன வெம்மை
சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினமான இன்றைய நாளில், ஈழத்தில் ஈழத்தில் போரில் காணாமற்போன ஈழக் குழந்தைகளின் நிலை குறித்து எண்ணுவதும் அதற்காக செயல்படுவதும் அது குறித்து உரையாடுவதும் ஆற்றுப்படுத்தலுக்கும் நீதிக்கும் அவசியமானது.
போரில் காணாமல் போன குழந்தைக்காக பதினாறு ஆண்டுகள் ஒரு தாய் படுகிற தவிப்பும் அல்லலும் அவலமும் ஒருபோதும் அடங்கிவிடாது. அத்தகைய தாய்மார்களின் மன வெம்மையே இத் தீவில் வீசுகிறது. குழந்தைகள் போருடன் தொடர்பற்றவர்கள். ஆனால் போரின் முதல் இலக்குகளே குழந்தைகள்தான்.
போர் மண்ணின் எதிர்காலத் தலைமுறைகளை இல்லாமல் செய்ய குழந்தைகளின் உயிருடன் விளையாடுகிறது. போரில் குழந்தைகள் பலியெடுக்கப்படுவதும் காணாமல் போவதும் உலகு முழுவதும் நிகழ்கிறது.
போர் குழந்தைகளை அவர்களின் மண்ணில் காணமற் போகச் செய்கிறது. மண்ணை விட்டுத் துரத்துகிறது. போரினால் தன் சொந்த மண்ணைவிட்டு காடுகளிலும் கடலிலும் பல குழந்தைகள் காணாமல் போகும் கதைகள் இன்றும் அரங்கேறிக்கொண்டுதானிருக்கின்றன.
காணாமல் போன குழந்தைகள் தினத்தின் கதை
அமெரிக்காவில் இட்டன் பாட்ஷ் என்ற ஆறு வயதுக்கு ழந்தை 1979இல் காணாமல் போனான். பள்ளிக்குச் சென்ற சிறுவன் காணாமல் போனதையடுத்து ஒரு புகைப்படக் கலைஞரான அவனது தந்தை அக் குழந்தையின் புகைப்படத்துடன் குழந்தையை தேடத் தொடங்கினார்.
அக் குழந்தையின் செய்தி ஊடகங்கள் முழுவதும் பரவின. பல ஊடகங்கள் அதனை தலைப்புச் செய்தியாகப் பிரசுரித்தன. அதனைத் தொடர்ந்து அக் குழந்தை தேடப்பட்டான்.
ஆறுகள், குழந்தைகள் என்று 1981வரை நடந்த தேடலில் 29 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்தப் பூமியின் அடுத்த தலைமுறையாக பிறக்கும் குழந்தைகள் கொன்றும் உயிரோடும் வீசப்பட்ட அந்தக் கொடுஞ்செயல்கள் பலரையும் அதிரச்சிகொள்ள வைத்தது.
இதனால் 1983இல் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் மே 25ஐ காணாமல் போன குழந்தைகளுக்கான தேசிய தினமாக அறிவித்தார். போர், புயல், மழை வெள்ளம் போன்ற செயற்கை மற்றும் இயற்கை இடர்களினால் உலகம் எங்கும் பல்வேறு தேசங்களில் குழந்தைகள் காணாமல் போவது என்பது தொடர்கதையாக இடம்பெறுகிறது.
அத்துடன் காணாமல் போகும் குழந்தைகளைத் தேடுவதும் அந்த்த் தேடல் பல வருடங்கள் நீள்வதும் சில குழந்தைகள் பல வருடங்களின் பின்னர் மீள்வதும் நடக்கிறது.
பாலச்சந்திரன் எனும் குறியீடு
ஈழத்தில் நடந்த போரில் பல குழந்தைகள் காணாமல் போனார்கள். பல குழந்தைகள் போர்க் களத்தில் கொல்லப்பட்டார்கள். ஈழம் குழந்தைகளின் குருதியில் நனைந்தது. ஈழ இறுதிப் போரில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஈழ இறுதிப் போரின் போது பச்சிளங் குழந்தைகளும் சிறுவர்களும் சிங்கள அரச படைகளால் கொன்று வீசப்பட்ட காட்சிகளை இந்த உலகம் அவ்வளவு எளிதில் மறந்துவிடாது. அத்துடன் இறுதிப் போர்க்களத்தில் பெரியவர்களுடன் சிறுவர்களும் கொடூர சித்திவதை செய்யப்பட்டு கொன்றமையும் உலகறிந்த விடயமே.
இனப்படுகொலை செய்யப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் குறியீடாக இருக்கும், காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் குறியீடாக இருக்கும் பாலச்சந்திரனை இன்றைய நாளில் நினைவுகொள்வது பொருத்தமானது.
பாலச்சந்திரன் என்ற பாலகன் இறுதிப் போரில் சரணடைந்த வேளையில், பிஸ்கட் கொடுக்கப்பட்டு இருத்தப்பட்ட கணமும் அவன் ஏதும் அறியாமல் ஏக்கத்துடன் தனித்திருந்த கணங்களும் பின்னர் அந்தப் பாலகனின் நெஞ்சில் இரும்புத் துப்பாக்கியால் துளையிட்டு இனப்படுகொலை செய்த கொடுமையும் உலகச் சிறுவர்களால் சகிக்க முடியாத பெருந்துயரம்.
அது மாத்திரமின்றி இறுதிப் போரில் எட்டு மாதக் குழந்தைகள் உட்பட 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் 29 பேரும், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுமாக சுமார் ஐம்பதிற்கு மேற்பட்டவர்களும் இலங்கை அரசிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பது அதிர்ச்சியான வரலாறு ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 25 May, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

