கடன் பொறிக்குள் சிக்க வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா! அம்பலப்படுத்திய சுனில் ஹந்துனெத்தி
அரசாங்கம் இன்று மணித்தியாலத்திற்கு 25 கோடி ரூபா கடன் பெறும் நிலையில் காணப்படுகிறது எனவும் அரசாங்கத்தின் வருமானத்தை விட வருடத்தில் அரசாங்கம் பெறும் கடன் அளவு அதிகரித்துள்ளது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சகாக்களுக்காக அநாவசிய வரி சலுகைகளை வழங்கியமையே இவ்வாறான பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
1950 ஆம் ஆண்டுக்கு பின்னர் 2020 இல் இலங்கை பொருளாதார வளர்ச்சி வேகம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாண்டு அதனை விடவும் சவால் மிக்க வருடமாகவுள்ளது. காரணம் அநாவசியமாக வரிகளை விலக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளாகும்.
பெருமளவில் வரி சலுகைகள் வழங்கப்பட்ட போதிலும் , அதன் எவ்வித பயனும் மக்களுக்கு கிடைக்கவில்லை. 2020 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் செலவுகள் 3,040 பில்லியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் மிகவும் சூட்சுமமாகவே 2019 ஐ விட 2020 இல் செலவுகள் குறைவு என அரசாங்கம் காண்பித்துள்ளது.
422 பில்லியனை மறைத்து இந்த தொகையை காண்பித்துள்ளது. அதற்கமைய உண்மையில் 2020 இல் அரசாங்கத்தின் செலவு 3,462 பில்லியனாகும். அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார முன்னெடுப்புக்கள் தவறானவை என்பது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் நாட்டை கடன்பொறிக்குள் சிக்கவைத்துள்ளது.
2019 இல் அரசாங்கம் மீள செலுத்த வேண்டிய கடன்தொகை 14,155 பில்லியன்களாகும். 2020 ஆகும் போது இந்த தொகை 16,427 பில்லியன்களாக அதிகரித்துள்ளது. இதில் 15,000 பில்லியன் மத்திய அரசாங்கத்தினால் மாத்திரம் செலுத்தப்பட வேண்டிய கடன் தொகையாகும்.
ஒரு வருட காலத்திற்குள் மீள செலுத்த வேண்டிய கடன்தொகை 2,272 பில்லியனால் உயர்வடைந்துள்ளது. இன்று மணித்தியாலத்திற்கு 25 கோடி ரூபா கடன் பெறும் அரசாங்கமே காணப்படுகிறது. அரசாங்கத்தின் வருமானத்தை விட வருடத்தில் அரசாங்கம் பெறும் கடன் அளவு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் மாத்திரம் 454 பில்லியன் நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் வெளிநாட்டு கடன்களைப் பெறவில்லை என்று அரசாங்கம் கூறுகின்ற போதிலும் , கடன் பங்கினை பாரியளவில் அதிகரித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.