வீதியை அபிவிருத்தி செய்து தர கோரியவர்களை மிரட்டிய மன்னார் நகரசபை தலைவர்!
மன்னார் நகர சபைக்கு சொந்தமான பெரியகமம் பகுதியில் உள்ள உள்ளக வீதி பலவருடங்களாக அபிவிருத்தி எதுவும் இன்றி காணப்பட்ட நிலையில் தொடர்சியாக பெய்துவரும் மழை காரணமாக குறித்த வீதி தற்போது மிதக்கும் பாதையாக காணப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பாக மன்னார் நகரசபை தலைவரிடம் முறையிட சென்ற அப்பகுதி மக்களை இழிவாக நடத்தியதாகவும் அவ்வீதியை தற்போது அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் நகர சபை தலைவர் பொறுப்பற்ற பதில் வழங்கியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த பெரியகமம் பகுதி வீதி பல வருடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மக்களின் தொடர்ச்சியான வேண்டுகோளின் அடிப்படையில் மன்னார் நகர பழைய பஸ் நிலையத்தில் இருந்து அகற்றப்பட்ட மக்கி வெறும் கண் துடைப்பிற்காக பெரியகம் பாதையில் கொட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் வீதி பணியானது ஒழுங்கான முறையில் பூரணப்படுத்தப்படாமையினால் அப்பகுதி மக்கள் பல இக்கட்டான சூழ்நிலையில் பல தடவைகள் மன்னார் நகர சபை தலைவரை சந்தித்து முறையிட்டதுடன் முறைப்பாட்டு கடிதங்கள் மற்றும் கோரிக்கைகளையும் வழங்கி வந்துள்ளனர்.
அவ்வாறு பல முறை முறையிட்டும் வீதி பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டுள்ளது. இருப்பினும் எல்லாம் சந்தர்பங்களிலும் மன்னார் நகரசபை தலைவரால் "உங்களுக்கு பாதை அமைத்து தானே கொடுக்கப்பட்டுள்ளது" என்ற பதில் மாத்திரம் தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் மன்னாரில் தொடர்சியாக சீரற்ற காலநிலை நீடித்து வருவதை தொடர்ந்து இன்று பாதை முற்றாக பாவிக்க முடியாமல் காணப்பட்ட நிலையில் இது சம்மந்தமாக மன்னார் நகர சபை தலைவரை மீண்டும் பெரியகமம் பகுதி மக்கள் சந்தித்து தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்க முற்பட்ட நிலையில் அவர் சந்திக்க வந்தவர்களை நோக்கி மிக இழக்காரமாகவும் தரக்குறைவான வார்த்தை பிரயோகித்ததாகவும் மிரட்டும் தொனியிலும் நடந்து கொண்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தொடர்சியாக மழை நீடிக்கவுள்ளமையினால் தங்களின் நிலையை தெரிவிக்க சென்றவர்களை இவ்வாறு தாழ்வாக நடத்தியமை தங்களை மனவேதனை படித்தியுள்ளதாகவும் மக்களின் வாக்குகளை பெற்று பதவிக்கு வருபவர்கள் மக்களின் நிலைமை தொடர்பில் அக்கறை கொள்வதில்லை எனவும் விரைவில் தங்கள் கிராம வீதியை அபிவிருத்தி செய்து வழங்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.