மக்களைக் காப்பாற்ற முடியவில்லையெனில் வெளியேறுங்கள்- கோட்டாபய-மஹிந்தவிற்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!
நாட்டு மக்களை பட்டினிச்சாவில் இருந்து மீட்க முடியாவிடின் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு வெளியேறுமாறு கோட்டாபய-மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவுறுத்தியுள்ளது.
ஆட்சியாளர்கள் தாமாக வெளியேறாத பட்சத்தில் மக்களே அவர்களை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் காலம் வெகுதொலைவில் இல்லை என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
சரியான வருமானம் இல்லையென்றால் நாளை இந்த நாட்டு மக்கள் உண்பதற்கு வழியில்லாமல் உயிரிழப்பார்கள். அப்படியென்றால் இந்த ராஜபக்சக்களின் பொருளாதார முகாமைத்துவம் எங்கே? சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தில் கொண்டுவந்த வேலைத்திட்டங்கள் எங்கே? என்ன ஆனது? யார் இதன் தலைவர்? யார் இவற்றை செய்வது? வர்த்தமானிகளை வெளியிட்டது பந்துல குணவர்தன, அந்த வர்த்தமானிகளை இரத்து செய்தது யார்? பந்துல இரத்து செய்தாரா? பசில் ராஜபக்ச இரத்து செய்தாரா? என்பது எமக்கு தெரியாது.
சிக்கலான , ஆட்சி செய்ய முடியாத, பொருளாதார முகாமைத்துவம் இல்லாத, எந்தவொரு தூரநோக்கும் இல்லாத, பணியாற்ற முடியாத முழுவதுமாக தோல்வியடைந்த ஒரு அரசாங்கம் இது என்பதால் நாட்டு மக்கள் பாரிய குழிக்குள் விழுந்துள்ளார்கள். இவர்களுக்கு தலையில் ஏதும் பிரச்சினையா? இவர்கள் எம் மக்களை உண்ண வழியில்லாத நிலைமைக்கு ஆளாக்கிவிட்டார்கள்.
இதில் இன்னும் சாப்பிட சொல்கின்றார்கள். மக்கள் எப்படி உண்பார்கள்? சரியாக உண்பதற்கு மக்களுக்கு பணம் இல்லை. மோசமான ஒரு நிலை எமக்கு உருவாகியுள்ளது. இவர்கள் எம் மக்களை ஏமாற்றி விட்டார்கள்.
விவசாயிகள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் என அனைவரையும் ஏமாற்றி வாக்குகளையும் பெற்றுக்கொண்டு ஆட்சிக்கு வந்துவிட்டு, தற்பொழுது எமக்கு தெரியாது, எங்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்றும் சொல்லும் நிலைக்கு அரசாங்கம் விழுந்துவிட்டது.
முடிந்தால் செய்யுங்கள் இல்லையென்றால் செல்லுங்கள் இப்படியே இன்னும் கொஞ்சக் காலம் செயற்படுவீர்கள் என்றால் மக்கள் விளக்குமாறால் தான் அடித்து விரட்டுவார்கள். மக்களுக்கு அந்த அளவுக்கு இந்த அரசாங்கத்தின் மீது வெறுப்பு உண்டாகிவிட்டது. அப்படியான ஒரு கீழ் மட்டத்திற்கு இந்த அரசாங்கம் விழுந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.