இலங்கை மக்கள் மட்டும் விதி விலக்கல்ல - அரசாங்கம் அறிவிப்பு
கொரோனா தொற்று நோய் பரவலால் ஏற்பட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக முழு உலக மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை மக்கள் மாத்திரம் அதற்கு விதிவிலக்கானவர்கள் அல்லர் எனவும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பொருட்களின் விலைகள் உலக சந்தைக்கு ஏற்பவே அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே இந்த சிக்கல்களை மக்கள் தாங்கிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும், ஸ்ரீலங்கா வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
முகக்கவச இறக்குமதியில் இலஞ்சம் பெற்றதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசாரணைகளுக்காக இன்றைய தினம் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையான அமைச்சர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
முழு உலகமும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி, பங்கீடு மற்றும் பரிமாற்றம் என்பன முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. கோடிக்கணக்கானவர்கள் தொழிலை இழந்துள்ளனர். கப்பல் கட்டணம் 300 வீதத்தால் அதிகரித்துள்ளது. கொள்கலன் விலைகள், எரிவாயு விலை, சிமெந்து விலை, இரும்பு விலை என அனைத்தும் அதிகரித்துள்ளன.
ஸ்ரீலங்காவில் உற்பத்தி செய்யப்படாத பொருட்களை விரும்பியோ, விரும்பாமலோ கொள்வனவு செய்தேயாக வேண்டும். ஆகவே இந்த பேரழிவை எதிர்கொண்டேயாக வேண்டும். முழு உலக மக்களும் இன்று வருமானத்தை இழந்துள்ளனர்.
உலகளாவிய வறுமை வரலாற்றில் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளதாக உலக வங்கியும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் தெரிவித்துள்ளன என்றார்.