மட்டக்களப்பு முருகன் தீவு சிவசக்தி வித்தியாலய மாணவர்களின் அவலநிலை (படங்கள்)
மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சாராவளி, பிரம்படி தீவு, முருகன் தீவு, போன்ற கிராமங்களில் இருந்து பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் தமது கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களது பாடசாலை நடவடிக்கைக்காக தங்களுடைய உயிரைக்கூட துச்சமாக மதிக்காது இவ்வாறு மாணவர்களும் ஆசிரியர்களும் நீரில் கடந்து பாடசாலைக்குச் செல்வது மிகவும் வேதனைக்குரிய விடயம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
முருகன் தீவில் இருக்கும் பாடசாலைக்கு சாராவளி மற்றும் பிரம்படித்தீவு ஆகிய கிராமங்களில் உள்ள மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளுக்காக செல்ல வேண்டி இருக்கின்றது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்குள்ள ஆசிரியர்கள் குறித்த மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமத்துக்கு ஒரு வீதி நகரத்துக்கு ஒரு வீதி மூன்று வீடுகளுக்கு ஒரு வீதி இரண்டு வீடுகளுக்கு ஒரு வீதி என அபிவிருத்தி மழை கொட்டி வருகின்ற வேளையிலும் இவ்வாறு பின் தங்கியிருக்கின்ற பாடசாலை மாணவர்கள் தங்களது எதிர்கால கனவுகளுடன் உயிரையும் கூட பணயம் வைத்து கல்விகற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது .
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கிண்ணியாவில் இடம்பெற்ற ஒரு துயரச் சம்பவம் போன்று இந்த மாணவர்களுக்கும் இடம்பெறக்கூடாது என்று கிராம பிரதேசவாசிகள் அங்கலாய்க்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்திகளை முன்னெடுத்து வருவதாக கூறும் அரசியல்வாதிகள் இந்த பின்தங்கிய மக்களின் அவல நிலைக்கு எவ்வாறான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பார்கள் என மக்கள் விசனத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.




