நெடுந்தீவில் இருந்து இறைச்சியுடன் வந்த காவல்துறையினர் : மடக்கிப்பிடித்த இளைஞர்கள்
நெடுந்தீவில் இருந்து விடுமுறையில் சென்ற காவல்துறை உத்தியோகத்தர் கொண்டு சென்ற பொதியில் இறைச்சி இருப்பதாக சந்தேகித்து அதனை குறிகாட்டுவானில் வைத்து சோதனையிட்ட போது, அதில் இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று (22) மாலை நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கிவந்த படகில் விடுமுறையில் செல்வதற்காக வந்த காவல்துறை உத்தியோகத்தர் கொண்டுவந்த பொதியில் இறைச்சி இருப்பதாக சந்தேகம் தெரிவித்து குறிகாட்டுவான் துறைமுகப் பகுதியில் வைத்து, கடந்த பல நாட்களாக கால்நடைகளை பறிகொடுத்த இளைஞர்கள் கடற்படையினரின் உதவியுடன் பரிசோதனை செய்தபோது இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, குறித்த காவல்துறையினர் பொதியும் குறிகாட்டுவானில் கடற்படையினரின் உதவியுடன் தடுத்து வைத்துவிட்டு யாழ். அரச அதிபர், நெடுந்தீவு பிரதேச செயலருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் இது தொடர்பாக வேலணை பிரதேச செயலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
கைப்பற்றப்பட்ட இறைச்சி
இதனடிப்படையில் ஊர்காவற்றுறை காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறிகாட்டுவான் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் நெடுந்தீவில் ஆடு காணாமல் போன இளைஞரிடம் முறைப்பாட்டினை பெற்றதுடன் கைப்பற்றப்பட்ட இறைச்சியினை ஆட்டிறைச்சியா மாட்டிறைச்சியா என ஆய்வு செய்தபின்னர் நாளையதினம் (23) தகவல் வழங்குவதாக தெரிவித்ததுடன் குறித்த இளைஞர்களை செல்லுமாறு அனுப்பிவைத்துள்ளதாக தெரியவருகிறது.
சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர், கடையில் மாட்டு இறைச்சியை வாங்கிய பற்றுச்சீட்டினை தனது கைவசம் வைத்திருந்தார்.
இந்தநிலையில், இறைச்சியை வாங்கிய பின்னர் அவர் விடுமுறையில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |