இலங்கையின் நிலை தொடர்பில் பொருளாதார ஆய்வாளர்களின் ஆபத்தான கணிப்பு!
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக எதிர்காலத்தில் அவற்றின் விலைகள் அதிகரிக்கும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
பல பொருட்கள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் இறக்குமதியாளர்கள் தங்கள் விலையை தற்போது அதிகரிப்பார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்பே சில பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்பு 250,000 ரூபாய் - 275,000 ரூபாய் வரை இருந்த சில கைத்தொலைபேசிகளின் விலை இப்போது 350,000 ஐ தாண்டியிருப்பதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியலில் தொலைபேசி, பட்டர், சீஸ், மின்சாதனப்பொருட்கள் என மனிதர்களுக்கு அன்றாடம் பயன்படும் அத்தியாவசிய பொருட்களும் உள்ளடங்குகின்றன.
உணவுப்பொருட்களின் விலை கிடுகிடுவென அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், இவ்வாறான பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளமை மக்களுக்கு சுமையை அதிகரிப்பதாக உள்ளது.
எனினும், புதிய இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த பொருட்களின் விலையை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என நிதி அமைச்சகத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் கூறினார்.
டொலரின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற 623 பொருட்களின் இறக்குமதி விதிகள் அமுல்படுத்தப்பட்டாலும், பொருட்களுக்கான விலை அதிகரிப்பு அல்லது தட்டுப்பாடு ஏற்படாதென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.