ராஜபக்ச யுகம் விரைவில் முடிவிற்கு வரும் - விடுக்கப்பட்ட சூளுரை
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுடன் ராஜபக்சாக்களின் யுகம் முடிவிற்கு கொண்டு வரப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று முன்தினம் (29) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாடு தற்போது முகம்கொடுத்துள்ள நெருக்கடி நிலைமைகளில் இருந்து, பசில் ராஜபக்ஷவால் நாட்டை மீட்க முடியாது. பசிலால் மட்டுமல்ல இந்த அரசாங்கத்திலுள்ள ஏனையோராலும் அதனைச் செய்ய முடியாது.
கடந்த அரசாங்கத்தில் பசில் இருந்தார். அப்போது அவர் செய்தது என்ன? ராஜபக்ஷக்களுக்கு அரசாங்கத்தில் மற்றொரு பதவியை வழங்கும் செயற்பாடே இது. முழு நாட்டையும் ராஜபக்ஷக்களுக்கு வழங்கும் செயற்பாடே இதுவாகும்.
மஹிந்த ராஜபக்ஷவை தவிர்த்து ஏனைய ராஜபக்ஷக்கள் அனைவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களே. பசில், சிராந்தி, புஸ்பா அல்லது ராஜபக்ஷக்களின் குடும்பத்தில் தற்போது பிறந்திருக்கும் குழந்தைகள் அரசியலுக்கு வந்தாலும், நாட்டை நாசமாக்குவதைத் தவிர்த்து அவர்களால் வேறு எதனையும் செய்ய முடியாது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இணையான கட்சி ஒன்றை அமைப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.