தாக்கலே செய்யப்படாத இந்திய பட்ஜெட்டுக்கு 85 நிமிடமாம்: தயாசிறிக்கு ஆளுங்கட்சி கொடுத்த பதிலடி
ஜனாதிபதியின் வரவு செலவு உரை நேரம் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த கருத்துக்களுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர் அசித்த நிரோஷன சபையில் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
4 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தைக் கொண்ட இந்தியாவில் வரவு செலவுத் திட்ட உரை வெறும் 85 நிமிடங்களில் வாசிக்கப்படும் நிலையில், இலங்கையில் ஜனாதிபதியின் வரவு செலவு உரை 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக தயாசிறி ஜயசேகர முன்னதாக விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்து உரையாற்றிய ஆளுங்கட்சி உறுப்பினர், தயாசிறி ஜயசேகரவின் கூற்று உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவித்தார் .
மிக நீண்ட வரவு செலவுத் திட்டம்
இந்தியாவின் 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியே அதனைத் தாக்கல் செய்யவுள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார் .

மேலும், இந்தியாவில் 85 நிமிடங்களில் வாசிக்கப்படும் வரவு செலவு திட்ட உரையை அந்த நாட்டு எதிர்க்கட்சியினரால் புரிந்துகொள்ள முடியும் எனக் குறிப்பிட்ட அவர், இலங்கையில் உள்ள எதிர்க்கட்சியினருக்கு 5 மணி நேரம் என்ன, ஒரு முழு நாள் விளக்கமளித்தாலும் புரியாது என விமர்சித்தார்.
இலங்கைப் நாடாளுமன்ற வரலாற்றில் மிக நீண்ட வரவு செலவுத் திட்ட உரையை 1977 ஆம் ஆண்டில் முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் நிகழ்த்தியதாகவும், அந்த உரை 5 மணி 30 நிமிடங்கள் நீடித்ததாகவும் அவர் சபையில் நினைவூட்டினார்.
அத்தோடு நாட்டின் மீது உண்மையான அக்கறையுள்ள ஒரு தலைவருக்கு மக்களிடம் கூறுவதற்கு நிறைய விடயங்கள் இருக்கும் என்பதையே ஜனாதிபதியின் உரை காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |