சிங்கத்தின் குகையில் சிக்கியுள்ள தலிபான்கள்
தலிபான்கள் சிங்கத்தின் குகையில் சிக்கி உள்ளதாக தேசிய எதிர்ப்பு கூட்டணியின் தலைவர் அகமது மசூத்தின் நெருங்கிய கூட்டாளியான ஹசம் முகமது தெரிவித்துள்ளார்.
பஞ்ச்சீர் மாகாணத்தை தலிபான்கள் கைப்பற்றிய நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நெடுஞ்சாலைகள், நகரப்பகுதிகள் ஆகியவற்றை மட்டுமே தலிபான்கள் கைப்பற்றி இருக்கிறார்கள். மீதி உள்ள இடங்கள் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. போர் தந்திரத்தின் அடிப்படையில்தான் நாங்கள் பின்வாங்கி சென்று தலிபான்களுக்கு வழி விட்டோம் எனத் தெரிவித்தார்.
இதேவேளை தலிபான்களின் தேசிய எதிர்ப்பு கூட்டணிக்கு தலைவராக அகமது மசூத் செயல்பட்டு வருகிறார். ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை ஜனாதிபதி அமருல்லா சலேவும் இந்த படையில் இடம்பெற்று இருக்கிறார்.
தலிபான்கள் பஞ்ச்சீர் பகுதிக்குள் நுழைந்ததும் அகமது மசூத், அமருல்லா சலே இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்பட்டது. இருவரும் தஜிகிஸ்தான் நாட்டுக்கு சென்று விட்டு அங்கிருந்து துருக்கிக்கு சென்று விட்டதாக தகவல் வெளியானது.
இதை தேசிய எதிர்ப்பு கூட்டணி மறுத்துள்ளது. இருவருமே பஞ்ச்சீர் பகுதியிலேயே தங்கி இருந்து எங்கள் படைகளை வழி நடத்தி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.