ராஜபக்சேவின் தொடர் அரசாக செயற்படும் திசநாயக ஆட்சி! வன்னி அரசு குற்றச்சாட்டு
தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவின் தொடர் அரசாகத்தான் திசநாயக அரசு செயல்படுகிறது என்பது அம்பலமாகியுள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடகர் சங்கீத்சனின் கைது குறித்த அவர் வெளியிட்ட அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் வைத்து கைது
“தமிழீழத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் பொது விழாக்களில் தமிழ்த்தேசிய எழுச்சிப்பாடல்களை பாடி இளைஞர்களை அரசியல் படுத்தி வருபவர் சங்கீத்சன்.
தமிழீழத்தின் நம்பிக்கைக்குரிய சொல்லிசை பாடகர். இவர் பாடினால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அணிதிரள்கிறார்கள்.
இதை பொறுக்க முடியாத இலங்கை அரசு, பாடகர் சங்கீத்சனை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்து பண்ணையாடி சிறைச்சாலையில் அடைத்திருக்கிறது.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். முள்ளிவாய்க்கால் மண்ணில் சிந்திய ரத்ததிலிருந்து உணர்வலைகள் இளைஞர்களாய் எழுந்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட இளைஞன் தான் சங்கீத்சன். சிங்கள பவுத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறை இன்னும் தொடர்வதன் சாட்சியம் தான் சங்கீத்சன் அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்திருப்பது.
மக்களை ஏமாற்றி வரும் போக்கு
இடதுசாரி அரசியலை முன்னெடுப்பதாக சொல்லி உலக அரங்கில் மக்களை ஏமாற்றி வரும் போக்கைத்தான் அநுர குமார திசநாயக அரசு தலைமையிலான ஜே.வி.பி அரசு செய்து வருகிறது.
தமிழீழ இளைஞர்கள் இன்று தமிழீழ விடுதலைக்கான குரலாக எழுந்து வருவதை ஒடுக்கும் போக்கை இலங்கை அரசு நிறுத்த வேண்டும்.
தமிழீழ மக்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை கருவியாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது. தமிழீழ உணர்வோடு எழுச்சிப்பாடல்களை பாடி வரும் தம்பி சங்கீத்சன் கைது நடவடிக்கை அரச பயங்கரவாத செயலாகும்.
ஆகவே, உடனடியாக தம்பி சசங்கீத்சனை யாழ் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |