பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்ச்சூடு நடத்திய பெண்! சுட்டுக் கொன்ற இஸ்ரேலிய இராணுவம்
மேற்குக்கரை பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காஸா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பலஸ்தீனம் உள்ளது.
காஸா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. மேற்குகரை பகுதியின் பலஸ்தீன அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார்.
மேற்குக்கரையின் சில பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதற்கிடையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த 10ஆம் திகதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து காஸா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. மேற்குகரை பகுதியிலும் இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குகரையின் ஹிப்ரோன் என்ற நகரில் உள்ள எலியஸ் சந்திப்பு பகுதியில் நேற்று இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு அதிநவீன எம்16 ரக துப்பாக்கியுடன் வந்த பலஸ்தீன பெண் இஸ்ரேலிய படையினர் மற்றும் அங்கிருந்த இஸ்ரேலிய பொதுமக்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த இஸ்ரேலிய மக்கள் தப்பியோடினர். துரிதமாக செயல்பட்ட இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய பலஸ்தீன பெண் மீது பதிலடி தாக்குதல் நடத்தினர்.
இஸ்ரேலிய படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இஸ்ரேல் காஸா முனையில் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து மேற்குக்கரை, லெபனான் எல்லையில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
