அம்பலாங்கொட பாடசாலையில் திருட்டு: சந்தேகநபர் கைது
அம்பலாங்கொட பாடசாலை ஒன்றின் கணினிப் பிரிவை உடைத்து இரண்டு டெப் கணினிகளை திருடியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வீடுகளை உடைத்து திருடியமை மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தமை உள்ளிட்ட 20 குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (16.09.2026) காலை அம்பலாங்கொட, தலுக்கந்த பகுதியில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக சட்ட நடவடிக்கை
சந்தேகநபரிடமிருந்து சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் வீடொன்றில் இருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் எரிவாயு சிலிண்டர் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையாகியுள்ள சந்தேகநபர், போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்கான பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறான திருட்டுகளில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அம்பலாங்கொட மற்றும் மேலும் சில காவல் நிலையங்களுக்கு சந்தேகநபருக்கு எதிராக வீடுகளை உடைத்து திருடியமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் பல்வேறு சந்தர்ப்பங்களில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பலப்பிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |