அமெரிக்க காங்கிரஸில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்! ஸ்ரீலங்கா அரசாங்கம் கண்டனம்
அமெரிக்க காங்கிரஸில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் உள்ளனர் என ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் மே 18ஆம் திகதி சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டொபோரா கே ரொஸ் உட்பட ஐந்து உறுப்பினர்கள் தீர்மானமொன்றை சமர்ப்பித்துள்ளதை கவனத்தில் எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மே 18ஆம் திகதி சபையின் வெளிவிவகார குழுவின் பரிசீலனைக்கு அந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தீர்மானத்தில் ஆதாரமற்ற அப்பட்டமான பொய்களை அடிப்படையாக கொண்ட குற்றச்சாட்டுகள் அடங்கியுள்ளன எனவும் இந்த தீர்மானத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானத்தின் நோக்கம் குறித்து கடும் சந்தேகங்கள் எழுந்தள்ளது. குறிப்பிட்ட தீர்மானத்தின் தவறான, பக்கச்சார்பான ஒரு தரப்பான தன்மையை கருத்தில்கொள்ளும்போது இது வெறுமனே மனித உரிமை குறித்த தீர்மானம் இல்லை என்பதை சுட்டிக்காட்டவேண்டியுள்ளது.
மாறாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் குழுவினரால் விடுதலைப்புலிகளின் பிரிவினைவாத நோக்கத்தை முன்னெடுக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சியாக இது தோன்றுகின்றது எனவும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.