மறைத்து வைக்கப்பட்ட சொத்துக்கள்! ஜே.வி.பியின் தேடலுக்கு நாமல் விளக்கம்
மறைத்து வைக்கும் அளவிற்கு தன்னிடம் எந்தவொரு சொத்துக்களும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பியினர் தற்போது குழப்பத்தில் உள்ளதால் தான் இவ்வாறு வீண் பழிகளை சுமத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின் 2025 ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்களை இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு வெளியிட்டிருந்தது.
மக்களுக்கு பொய்யுரைக்கவில்லை
இவ்விடயம் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “எங்களுடைய சொத்துக்கள் தொடர்பில் பல வருட காலமாக ஜே.வி.பி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் நல்லாட்சி அரசாங்கங்கள் இணைந்து ஆராய்ந்தன.
நாங்கள் எதையும் மறைக்கவில்லை. நாங்கள் மக்களிடம் பெற்று அரசியல் நடத்தவில்லை. மக்களுக்கு பொய்க்கூறி அரசியல் நடத்தவும் இல்லை.
அரசியலுக்கு பிரவேசித்த நாள் தொடக்கம் எனது சொத்து மற்றும் பொறுப்புக்களை உரிய தரப்பினரிடம் முன்னிலைப்படுத்தி வருகிறேன்.
வீண் பழி சுமத்தும் ஜே.வி.பி
தற்போதைய ஜே.வி.பி அரசாங்கம் எனது மனைவியின் சொத்துக்களையும் என் மீது சுமத்தி வீண் கதைகளை பரப்பி வருகின்றனர்.
ஜேவிபியினர் தற்போது குழப்பத்தில் உள்ளதால் தான் இவ்வாறு வீண் பழிகளை சுமத்தி வருகின்றனர். எங்களிடம் ஒழித்து மறைக்க எந்தவொரு சொத்துக்களும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
